இந்தியா

அதானியை பிரதமர் மோடி விசாரிக்க மாட்டார் - ராகுல் காந்தி

Published On 2024-12-05 07:23 GMT   |   Update On 2024-12-05 07:23 GMT
  • அதானிக்கு எதிராக அமெரிக்க கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
  • தொழிலதிபர் அதானியை கைது செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

அதானியின் சூரிய மின்சக்தி நிறுவனம் தயாரிக்கும் மின்சாரத்தை வினியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்காக ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாடு, காஷ்மீர், சத்தீஸ்கர் மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,000 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுத்துள்ளார் என அமெரிக்கா குற்றம்சாட்டியது.

இதை மறைத்து அமெரிக்கர்களிடம் இருந்து அதிகளவிலான முதலீடுகளைப் பெற்றுள்ளதாகவும், இது அமெரிக்க சட்டத்துக்கு எதிரானது என அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (எஸ்.இ.சி.) சார்பில் நியூயார்க் பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதானியின் மருமகனும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவன செயல் இயக்குனருமான சாகர் அதானி உள்பட 7 பேர் மீது லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி தொடர்பாக தனித்தனியாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அதானிக்கு எதிராக அமெரிக்க கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இதற்கிடையே, தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வோம் என அதானி குழுமம் அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. தொழிலதிபர் அதானியை கைது செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இந்நிலையில், அதானி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் 3 ஆம் நாளாக இந்தியா கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, "மோடி அதானியை விசாரிக்க மாட்டார். ஏனென்றால் அவர் அதைச் செய்தால், அவர் தன்னைத்தானே விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார். இப்போராட்டத்தில் மோடியும் அதானியும் ஒன்று தான் என்ற வாசகத்தை காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் தங்களது சட்டைக்கு பின்னால் அச்சிட்டிருந்தனர்.

Tags:    

Similar News