இந்தியா

மும்பை படகு விபத்து: ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்

Published On 2024-12-18 19:15 GMT   |   Update On 2024-12-18 19:15 GMT
  • மும்பை படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
  • பிரதமர் மோடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமாக ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

புதுடெல்லி:

மும்பையில் சுமார் 100-க்கும் அதிகமான பயணிகளுடன் சென்ற படகு மீது, வேகமாக சென்ற கடற்படை படகு கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதனால பயணிகள் படகு கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 13 பேர் பலியாகினர் எனக்கூறிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு முதல் மந்திரி நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றார்.

இந்நிலையில், மும்பை படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மும்பை துறைமுகம் அருகே பயணிகள் படகு மற்றும் இந்திய கடற்படையின் படகு விபத்துக்கு உள்ளானதை அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் விரைவாக வெற்றி அடையவும், உயிர் பிழைத்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதேபோல், படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், மும்பையில் படகு விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமாக ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News