'ஒரே நாடு, ஒரே மின்கட்டணம்' கொள்கைக்கு நிதிஷ்குமார் அழைப்பு
- எல்லா மாநிலங்களுமே நாட்டின் வளர்ச்சிக்கு தீவிர பங்காற்றுகின்றன.
- நாடு முழுவதும் ஒரே சீரான மின்கட்டணம் இருக்க வேண்டும்.
பாட்னா :
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் ரூ.15 ஆயிரத்து 871 கோடி மதிப்பிலான மின்துறை திட்டங்களை முதல்-மந்திரி நிதிஷ்குமார் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
நாட்டில் ஒருசில மாநிலங்கள், மற்ற மாநிலங்களை விட அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் ெசய்ய வேண்டி இருக்கிறது. உதாரணமாக, மத்திய அரசின் மின்உற்பத்தி நிலையங்களில் இருந்து பீகார் மாநிலம் மற்ற மாநிலங்களை விட அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி வருகிறது.
அந்த மின்சாரத்தை பொதுமக்களுக்கு மிகக்குறைந்த விலைக்கு அளித்து வருகிறது. 2018-ம் ஆண்டு, பீகாரில் அனைத்து வீடுகளுக்கும் மின்இணைப்பு கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்தது.
2005-ம் ஆண்டு, நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, மின்சார பயன்பாடு வெறும் 700 மெகாவாட்டாக இருந்தது. தற்போது, 6 ஆயிரத்து 738 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. வெளிப்படைத்தன்மையை உருவாக்க விரைவில் ஸ்மார்ட் ப்ரீபெய்டு மீட்டர் பொருத்தப் போகிறோம்.
எல்லா மாநிலங்களுமே நாட்டின் வளர்ச்சிக்கு தீவிர பங்காற்றுகின்றன. பிறகு ஏன் சில மாநிலங்கள் மட்டும் மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்க வேண்டும்?
நாடு முழுவதும் ஒரே சீரான மின்கட்டணம் இருக்க வேண்டும். அதற்கு 'ஒரே நாடு, ஒரே மின்கட்டணம்' கொள்கையை ஏற்க வேண்டும் என்று முன்பே பல தடவை சொல்லி இருக்கிறேன்.
நாங்கள் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி, மானிய விலையில் மக்களுக்கு கொடுக்கிறோம். இலவச மின்சாரம் கொடுக்க வேண்டும் என்று கூறுபவர்களை பற்றி நான் கவலைப்படவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.