ரெயில் விபத்தை சுட்டிக்காட்டி பழி சுமத்திய காங்கிரஸ்: பதிலடி கொடுத்த ரெயில்வே அமைச்சகம்
- சமூக வலைதளங்களில் இந்திய ரெயில்வே துறையை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
- சரக்கு ரெயில்களுடன் மோதிய என்ஜின் இந்திய ரெயில்வேயின் கீழ் வராது.
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் சரக்கு ரெயிலும் ரெயில் என்ஜினும் மோதிய சம்பவத்தில் எதிர்க்கட்சிகளின் பழி சுமத்தும் விளையாட்டை இந்திய ரெயில்வே அமைச்சகம் கண்டித்ததுடன், நாட்டு மக்களை தவறாக வழி நடத்த வேண்டாம் என காங்கிரஸ் கட்சியை எச்சரித்துள்ளது.
சமூக வலைதளங்களில் இந்திய ரெயில்வே துறையை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. குற்றம்சாடும் போதெல்லாம் அதற்கு இந்திய ரெயில்வே விளக்கம் அளித்து வருகிறது. இதனால் இந்திய ரெயில்வே- காங்கிரஸ் இடையே வார்த்தை போர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
அந்த வகையில தற்போது உ.பி. ரெயில் விபத்து தொடர்பாக வார்த்தைப்போர் நடைபெற்றுள்ளது.
ரேபரேலியில் சரக்கு ரெயிலும் ரெயில் என்ஜினும் மோதிய படத்தை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு "ரீல் அமைச்சரே (ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவை காங்கிரஸ் இப்படி அழைக்கிறது). மற்றொரு சிறிய விபத்து நடந்துள்ளது. இந்த நேரம் இந்த சிறிய விபத்து உ.பி. ரேபரேலியில் நடைபெற்றுள்ளது. லோகோ பைலட் (டிரைவர்) மற்றும் ஒருவர் காயம் அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது உங்களுடைய தகவலுக்காக..." எனக் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு ரெயில்வே அமைச்சகம் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் விளக்கமும் அளிக்கப்பட்டது.
ரெயில்வே அமைச்சகம் எக்ஸ் தளத்தில், "சரக்கு ரெயில்களுடன் மோதிய என்ஜின் இந்திய ரெயில்வேயின் கீழ் வராது. டிரைவர் கூட ரெயில்வேயை சேர்ந்தவர் இல்லை" என்று அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் சரக்கு ரெயிலும், ரெயில் என்ஜினும் நேருக்கு நேர் மோதியதில் என்ஜின் தடம் புரண்டது. இந்த விபத்து உஞ்சஹரில் உள்ள என்டிபிசி மின்நிலையம் அமைந்துள்ள இடத்தில் திங்கள்கிழமை மாலை நடந்தது. இந்த விபத்து சிக்னல் மற்றும் பாதை சீரமைப்பு குறித்த தவறான தகவல் தொடர்பு காரணமாக ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் லோகோ பைலட் மற்றும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
முன்னதாக 2014-ம் ஆண்டின் ரெயில் கட்டணம், 2024-ம் ஆண்டின் ரெயில் கட்டணம் ஆகியவற்றை ஒப்பிட்டு காங்கிரஸ் எக்ஸ் பக்கத்தில செய்தி வெளியிட்டிருந்தது. இதில் உள்ள விவரங்கள் சரியான தரவுகள் அல்ல என ரெயில்வே அமைச்சகம் பதில் அளித்திருந்தது.