இந்தியா

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் ஒரு இந்தியர் மாயம்

Published On 2023-02-08 18:21 IST   |   Update On 2023-02-08 18:21:00 IST
  • காணாமல் போனவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • துருக்கியின் 10 மாகாணங்களில் மூன்று மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

துருக்கி- சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று பிற்பகல் நிலவரப்படி உயிரிழப்பு 11 ஆயிரத்தை தாண்டியது. இடிபாடுகளை தோண்டத்தோண்ட சடலங்கள் தென்பட்ட வண்ணம் உள்ளன. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

துருக்கியில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு பல மாதங்கள் ஆகலாம். மீட்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களில் மூன்று மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து இந்தியர்கள் 75 பேரிடம் இருந்து உதவி கேட்டு அழைப்பு வந்துள்ளதாகவும், ஒருவரை காணவில்லை என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. காணாமல் போனவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைதூர பகுதியில் சிக்கியிருந்த 10 இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

Tags:    

Similar News