டெல்லி ரெயில் நிலைய கூட்ட நெரிசலில் 15 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்
- டெல்லி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
- கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.
புதுடெல்லி:
உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட விடுமுறை நாட்களில் அதிக கூட்டம் காணப்படுகிறது.
அந்த வகையில், டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உத்தர பிரதேசம் செல்லும் ரயிலில் ஏற ஒரே நேரத்தில் பயணிகள் முண்டியடித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்
இந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், புதுடெல்லி ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது அறிந்து துன்பமடைந்தேன். தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்த அனைவருடன் என் எண்ணங்கள் உள்ளன. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த நெரிசலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிகாரிகள் உதவி வருகின்றனர் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.