அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு முதலாம் ஆண்டு: பிரதமர் மோடி வாழ்த்து
- ராமர் கோவில் இந்திய கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் ஒரு சிறந்த பாரம்பரியம்.
- வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்புவதற்கான உறுதிமொழியை நிறைவேற்றுவதில் பெரிய உத்வேகமாக இருக்கும்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்று ஒராண்டு முடிவடையும் நிலையில், ராமர் கோவில் குடமுழுக்கு முதலாண்டு ஆண்டு விழா நடத்தப்படுகிறது. இன்று முதல் 3 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தள்ளார். அதில் "வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்புவதற்கான உறுதிமொழியை நிறைவேற்றுவதில் இந்த தெய்வீக மற்றும் பிரமாண்டமான ராமர் கோவில் ஒரு பெரிய உத்வேகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "ராமர் கோவில் இந்திய கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் ஒரு சிறந்த பாரம்பரியம். இது பல நூற்றாண்டுகளின் தியாகங்கள், போராட்டம் மற்றும் பக்திக்குப் பிறகு கட்டப்பட்டது" என்றார்.
அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து, ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் மேற்பார்வையில் பிரமாண்ட கோவில் கட்டப்பட்டது.
அக்கோவிலில் கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி, குழந்தை ராமர் சிலைக்கு பிரதமர் மோடி முன்னிலையில் குடமுழுக்கு விழா நடந்தது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் அக்காட்சியை நேரலையில் பார்த்தனர்.
இதற்கிடையே, ஜனவரி 11-ந் தேதி ராமர் கோவில் நிறுவப்பட்ட தினம் என்பதால், குடமுழுக்கு முதலாம் ஆண்டு விழா, 11-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. 13-ந் தேதிவரை 3 நாட்கள் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
ராமர் கோவில் குடமுழுக்கு நடந்த பகுதியில், 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் ஜெர்மன் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. கூடாரத்திலும், யாகசாலையிலும் பாரம்பரிய கலாசார நிகழ்ச்சிகள், சடங்குகள், தினசரி ராமகதை பிரசங்கங்கள் ஆகியவை நடைபெறும்.
தினந்தோறும் பகல் 2 மணிக்கு ராமகதை அமர்வு தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து, ராமசரிதமனாஸ் பிரசங்கம் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடக்கும். தினமும் காலையில் பிரசாத வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.