இந்தியா

உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்- பிரதமர் மோடி

Published On 2025-02-24 14:51 IST   |   Update On 2025-02-24 14:51:00 IST
  • ஜவுளி, சுற்றுலா மற்றும் தொழில்நுட்ப துறைகள் வரும் ஆண்டுகளில் கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
  • இந்தியாவின் மின்சார வாகன புரட்சியில் மத்திய பிரதேசம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகும்.

போபால்:

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உலக முதலீட்டாளா்கள் உச்சி மாநாடு இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.

மத்திய பிரதேசத்தை உலகளாவிய முதலீட்டு மையமாக முன்னிறுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த மாநாட்டில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும், இந்தியாவில் இருந்து 300-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில்துறை தலைவா்கள் மற்றும் கொள்கை வகுப்பாளா்களும் பங்கேற்றனர்.

வாகனத் தொழில் கண்காட்சி, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு கண்காட்சி, 'ஒரு மாவட்டம், ஒரு பொருள்' திட்டம் தொடா்பான கண்காட்சி என 3 கண்காட்சிகள் நடைபெறுகிறது.

உலக முதலீட்டாளா்கள் உச்சி மாநாட்டை பிரதமா் மோடி தொடங்கி வைத்தார். மத்தியப் பிரதேச அரசின் 18 புதிய கொள்கைகளையும் அவர் வெளியிட்டார். உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் பிரதமா் மோடி பேசியதாவது:-

மாநாட்டு நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இருப்பது நினைவுக்கு வந்தது. பாதுகாப்பு காரணங்களால் சாலைகள் மூடப்பட்டதால் தேர்வுக்கு செல்வது தாமதமாகும். மாணவ, மாணவிகள் சரியான நேரத்தில் தேர்வு மையத்தை அடைவதற்காக நான் 15 முதல் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டேன். உங்கள் சிரமத்திற்கு மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இந்திய வரலாற்றில் முதல்முறையாக, முழு உலகமும் இந்தியாவைப் பற்றி மிகவும் நம்பிக்கையுடன் இருக்கும்போது இதுபோன்ற ஒரு வாய்ப்பு வந்துள்ளது. சாதாரண மக்களாக இருந்தாலும் சரி, பொருளாதார கொள்கை வல்லுனர்களாக இருந்தாலும் சரி, பல்வேறு நாடுகளாக இருந்தாலும் சரி, நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் இந்தியாவிடம் இருந்து பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன.

வரும் ஆண்டுகளில் உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து இருக்கும் என்று உலக வங்கி சமீபத்தில் தெரிவித்தது. உலகளாவிய விண்வெளி நிறுவனங்களுக்கான சிறந்த வினியோகமாக இந்தியா வளர்ந்து வருகிறது.

ஜவுளி, சுற்றுலா மற்றும் தொழில்நுட்ப துறைகள் வரும் ஆண்டுகளில் கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

மத்திய பிரதேசம் முதலீட்டாளர்களுக்கு சிறந்த வருமானத்திற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. வலுவான திறமையாளர்கள் குழு மற்றும் செழிப்பான தொழில்களுடன் மத்திய பிரதேசம் ஒரு விருப்பமான வணிக இடமாக மாறி வருகிறது.

இந்தியாவின் மின்சார வாகன புரட்சியில் மத்திய பிரதேசம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகும். மத்திய பிரதேசத்தில் இரட்டை எந்திர அரசாங்கத்துக்கு பிறகு வளர்ச்சியின் வேகம் இரட்டிப்பாகியுள்ளது.

இவ்வாறு மோடி பேசினார்.

Tags:    

Similar News