இந்தியா

கெஜ்ரிவால் கோட்டையை தகர்த்து அசைக்க முடியாத தலைவராக உயர்ந்து நிற்கும் பிரதமர் மோடி

Published On 2025-02-09 12:56 IST   |   Update On 2025-02-09 12:56:00 IST
  • மதுபான கொள்கை முறை கேட்டை அம்பலப்படுத்தி சாய்த்தார்கள்.
  • மோடியின் மீதான நல்லெண்ணமும், நன்மதிப்பும் மக்கள் மத்தியில் அதிகரித்தது.

நாட்டில் பல மாநிலங்களில் பிரதமர் மோடி அலை வீசிய போதும் தலைநகர் டெல்லியில் எந்த சலனமும் இல்லை என்ற நிலை தான் நேற்று வரை...

ஆனால் தேர்தல் முடிவின் மூலம் டெல்லியை தாக்கிய மோடி அலை 48 தொகுதிகளை வாரி சுருட்டி உள்ளது.

27 ஆண்டுகளாக டெல்லி மாநில ஆட்சியை பா.ஜனதாவால் கைப்பற்ற முடிய வில்லை. மோடியின் ஜம்பம் இங்கு பலிக்காது என்று கெஜ்ரிவாலின் பிம்பம் விசுவ ரூபமெடுத்து தடுத்து நின்றது.

3 முறை பிரதமராக வென்று தலைநகரில் அமர்ந்து நாட்டையே ஆண்டாலும் தலைநகர் டெல்லி மாநிலத்தை பா.ஜ.க. வால் பிடிக்க முடியவில்லை என்ற குறை இருந்தது. அதை இந்த தேர்தலில் போக்கி, மோடி அலையை யாராலும் தடுக்க முடியாது என்பதையும் நிரூபித்து உள்ளார்.

வெற்றிக்களிப்பில் இருந்த மோடியை பூ மழை தூவி கட்சி அலுவலகத்துக்கு தொண்டர்கள் அழைத்து சென்றார்கள்.

2014-ல் தொடங்கிய மோடி அலை எப்போதும் வீசத்தான் செய்யும் என்பதை இந்த தேர்தல் மூலம் மோடி நிரூபித்துள்ளார்.

கெஜ்ரிவால் ஊழலுக்கு எதிரானவர் என்று உருவாக்கி வைத்திருந்த பிம்பத்தை மதுபான கொள்கை முறை கேட்டை அம்பலப்படுத்தி சாய்த்தார்கள்.

ஆனால் மோடியின் மீதான நல்லெண்ணமும், நன்மதிப்பும் மக்கள் மத்தியில் அதிகரித்தது. இதற்கு பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் 7 எம்.பி.க்களை பா.ஜனதா கைப்பற்றியது ஒரு உதாரணம்.

இதை நேற்று நடந்த வெற்றி விழா கூட்டத்திலும் மோடி நினைவுப்படுத்தி, டெல்லி மக்கள் எப்போதும் என்னை கைவிட்டதில்லை என்று உணர்ச்சி பொங்க குறிப்பிட்டார்.

இலவசங்களை கொடுத்தும், குடிநீர் திட்டங்களை அறிவித்தும் குடிசைப்பகுதி மக்களிடம் செல்வாக்குடன் இருந்தது ஆம் ஆத்மி.

ஆனால் இந்த தேர்தலில் நடைமுறையில் இருக்கும் இலவசங்கள் தொடரும். அதே நேரம் குடிசை மக்களுக்கு பக்கா வீடுகள் கட்டித் தரும் வாக்குறுதியையும் அளித்து குடிசைப் பகுதி வாக்குகளை மோடி அள்ளினார்.

டெல்லியில் முஸ்லீம் வாக்காளர்கள் 13 சதவீதம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் மத்தியிலும் மோடி யின் செல்வாக்கு உயர்ந்து இருக்கிறது.

முஸ்லீம்கள் நிறைந்த பகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. மோகன்சிக்பிஷ்ட், கபில் மிஷ்ரா ஆகிய 2 பேர் முஸ்லீம்கள் நிறைந்த தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளார்கள்.

இது தவிர டெல்லி வாசிகளில் 40 சதவீதம் பேர் நடுத்தர வர்க்கத்தினர்கள். ஆம் ஆத்மிக்கு ஆதரவா னவர்களாக இருந்தாலும் மாநிலத்தின் மோசமான உட்கட்டமைப்பு, குப்பைகள், காற்று மாசுபடுதல் போன்றவற்றால் அவர்கள் விரக்தியில் இருந்தனர்.

இதை கையில் எடுத்த பிரதமர் மோடி ப.ஜனதா ஆட்சிக்கு வந்தால் டெல்லி யின் முகத்தை மாற்றி காட்டுவேன் என்று பிரசாரம் செய்தார். இதனால் மக்கள் ஆதரவு மோடியின் பக்கம் திரும்பியது.

அதே போல் பெண்களுக்கு மாதம் ரூ.2100 என்று ஆம்ஆத்மி அறிவித்தது. பா.ஜனதாவும் தனது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவித்தது. இது பெண்கள் மத்தியில் ஆதரவை ஏற்படுத்தியது.

அத்துடன் மாநிலத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்த மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் மாநில அரசு தேவை. இரட்டை என்ஜின் அரசாங்கத்தை நீங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று மோடி பிரசார கூட்டங்களில் விடுத்த வேண்டுகோள் மக்களிடம் எடுபட்டது.

நாடு முழுவதும் செயல்படுத்தி வரும் திட்டங்களை பார்த்து மோடி மூலம் மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். இது மோடிக்கு மிகப் பெரிய வெற்றியை தேடிக் கொடுத்துள்ளனர்.

கெஜ்ரிவால் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு உள்ளூர் மற்றும் தொகுதி சார்ந்த பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து மோடி மேற்கொண்ட பிரசார வியூகம் வெற்றியை தேடிக் கொடுத்துள்ளது.

அனைவரின் வளர்ச்சி, அனைவரின்ஆதரவு, அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்று தனது அணுகு முறையை கையாளும் மோடி அரசியல் ரீதியாக எதிர்கொள்ளும் சவால்களை அரசியல் ரீதியாக சாதுர்யமாக வியூகம் அமைத்து வெற்றி பெற்று வருகிறார்.

இதற்கு முன்பு வடகிழக்கு மாநிலங்களும் சரி, இப்போது டெல்லியும் சரி தாமரை காலூன்றவே முடியாது என்று நம்பப்பட்ட மாநிலங்கள்.

இந்த மாநிலங்களில் தன் மீதான நம்பிக்கையை வளர்த்ததுடன் எதிர்கட்சி களின் அரசியல் வியூகத்தை யும் சாதுர்யமாக வியூகம் அமைத்து உடைத்து வெற்றி கொள்வதில் மோடிக்கு நிகர் மோடிதான்.

நாடு முழுவதும் பல கட்சிகளை களத்தில் எதிர் கொண்டாலும் மற்ற கட்சிகளை விமர்சிப்பதை விட காங்கிரசையே கடுமையாக விமர்சிப்பார். காங்கிரசின் தவறான கொள்கைகளால்தான் நாட்டின் மிகப் பெரிய வளர்ச்சி தடைப்பட்டது என்று கூறும் மோடி காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று முழங்கினார்.

அதை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரசும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. மோடி தான் ஒரு அசைக்க முடியாத தலைவர் என்பதை நிரூபித்து வருகிறார்.

Tags:    

Similar News