ராகுல்காந்தி பவுன்சர்போல செயல்படுகிறார்-பிரதாப் சந்திர சாரங்கி
- பிரதாப் சந்திர சாரங்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
- எதிர்க்கட்சித் தலைவரைப் போல் அல்லாமல் பவுன்சர் போல் நடந்து கொண்டார்.
புதுடெல்லி:
அம்பேத்கரை மத்திய மந்திரி அமித்ஷா அவமதித்ததாக கூறி கடந்த வாரம் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
பதிலுக்கு பா.ஜ.க. எம்.பி.க்களும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் ஒடிசா மாநிலம் பாலசோரைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்து காயம் அடைந்தார்.
ராகுல்காந்தி தன்னை கீழே தள்ளியதாக அவர் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. காயம் அடைந்த பிரதாப் சந்திர சாரங்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்தநிலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்பை விட தற்போது நலமாக உள்ளேன். என் தலையில் உள்ள தையல்கள் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவத்தின்போது திடீரென ராகுல் காந்தி தனது கட்சியினருடன் வந்து முன்நோக்கி தள்ளினார்.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரைப் போல் அல்லாமல் பவுன்சர் போல் நடந்து கொண்டார். ஒரு காலத்தில் வாஜ்பாய் போன்ற பெரியவர்கள் இந்த பதவியில் இருந்திருக்கிறார்கள் என்றார்.