ராஜஸ்தானில் பா.ஜனதாவின் முதல்வர் வேட்பாளர் யார்?- ஷெகாவத் விளக்கம்
- பா.ஜனதா முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தாமல் தேர்தலை எதிர்கொள்கிறது.
- எங்களது முகம் பிரதமர் மோடி, தாமரை என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
200 தொகுதிளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு அடைகிறது. இதனால் பா.ஜனதா கடைசி கட்டமாக 18 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிரிராஜ் சிங் நேற்று பா.ஜனதாவில் இணைந்தார். உடனே அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக பா.ஜனதா கட்சி மாநிலத் தேர்தல்களில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதில்லை. இந்த நடைமுறையைத்தான் ராஜஸ்தானிலும் கடைபிடிக்கிறது. ஏற்கனவே முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே சந்தியா ஓரங்கப்படுவதாக தெரிகிறது. இதனால் வேறு நபர்தான் முதல்வராக வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் முதல்வர் வேட்பாளர் குறித்து மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில் ''தற்போது பிரதமர் மோடி மற்றும் தாமரைதான் எங்கள் முகம் (தேர்தலில் முன்னிறுத்துவது). பின்னர் எம்.எல்.ஏ.-க்கள், கட்சியின் பாராளுமன்ற குழுவில் இடம் பிடித்துள்ளவர்கள் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வார்கள். முதலமைச்சர் தேர்வு செய்யப்படும் நபர் யாராக இருந்தாலும் அவருடைய பதிக்காலம் முழுமை அடைவதை உறுதி செய்வோம்'' என்றார்.