கூட்டநெரிசலுக்கு பின் டெல்லி ரெயில் நிலையத்தில் கைக்குழந்தையுடன் பணி செய்யும் RPF கான்ஸ்டபிள் வைரல்
- தனது 1 வயது குழந்தையை சுமந்தவாறு ரயில்வே போலீஸ் ரீனா பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளார்.
- பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா செல்ல புறப்பட்ட மக்கள் நேற்று முன் தினம் (சனிக்கிழமை) இரவு டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்டநெரிசலில் சிக்கினர்.
இதில் 3 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து டெல்லி ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கூட்டநெரிசலுக்கு பின்னர், மகா கும்பமேளா செல்லும் வழித்தடத்தில் கூடுதலாக 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.
இந்நிலையில் டெல்லி ரெயில் நிலையத்தில் தனது 1 வயது குழந்தையை சுமந்தவாறு ரீனா என்ற ரெயில்வே போலீஸ் (RPF) கான்டபிள் தனது கடமையை செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
18 பேர் உயிரிழந்த ரெயில் நிலையத்தின் 16 ஆவது நடைமேடையில் ரீனா தனது குழந்தையை சுமந்தவாறு பயணிகளை ஒழுங்குபடுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அவரது அர்ப்பணிப்பைக் கண்டு, பல பயணிகள் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வணக்கம் செலுத்தி செல்கின்றனர்.