இந்தியா

மும்பையில் வாழ மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை- RSS தலைவர் சர்ச்சை கருத்து

Published On 2025-03-06 14:43 IST   |   Update On 2025-03-06 14:43:00 IST
  • இந்தியை திணித்து தமிழை அழிக்க பாஜக அரசு முயற்சிப்பதாக ஆளும் திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது.
  • மராத்தி தான் மும்பையின் மொழி என்று MLA ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வாழ்வதற்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையின் மூலம் இந்தியை திணித்து தமிழை அழிக்க பாஜக அரசு முயற்சிப்பதாக ஆளும் திமுக அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இக்கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பையாஜி ஜோஷி, "மும்பையில் ஒரு மொழி பேசுபவர்கள் மட்டும் கிடையாது. இங்கு ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வேறு மொழிகளை பேசுபவர்கள் இருக்கிறார்கள். காட்கோபர் பகுதி மக்கள் குஜராத்தி பேசுகிறார்கள். ஆதலால் நீங்கள் மும்பையில் வசித்தால் மராத்தி மொழி கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார்.

இதே நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா அமைச்சர் மங்கள் பிரபாத் லோபா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

மராத்தி குறித்து பையாஜி ஜோஷி தெரிவித்த கருத்துக்கு சிவசேனா (உத்தவ் தாக்கரே), காங்கிரஸ் காட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன

இந்த விவகாரம் குறித்து பேசிய எம்.பி. சஞ்சய் ராவத், "பாஜகவின் கொள்கை வகுப்பாளரும் ஆர்.எஸ்.எஸ் தலைவருமான பையாஜி ஜோஷி, மராத்தி மும்பையின் மொழி இல்லை என்று கூறியிருக்கிறார். அவர் கொல்கத்தாவிற்கு சென்று பெங்காலி அவர்களின் மொழி இல்லை என்று கூறுவாரா? அவர் சென்னைக்கு சென்று தமிழ் அவர்களின் மொழி இல்லை என்று கூறுவாரா?" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News