உதயநிதி மீது புதிய வழக்கு பதியக்கூடாது- சுப்ரீம் கோர்ட்
- உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடந்த மாநாட்டில் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசினார்.
- இந்த வழக்கில் அனைத்து எதிர் மனுதாரர்களும் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கிறோம்.
புதுடெல்லி:
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந் தேதி சென்னையில் நடந்த மாநாட்டில் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசினார்.
இந்த கருத்துக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் மீது ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார், கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர் உள்பட பல மாநிலங்களில் போலீஸ் நிலையங்கள் மற்றும் கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகளை ஒரே வழக்காக இணைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் இந்த வழக்குகளை சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்ற கோரப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடந்தது.
அப்போது உதயநிதி தரப்பு மூத்த வக்கீல்கள் பி.வில்சன் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், இந்த வழக்கை சென்னைக்கு மாற்ற முடியவில்லை என்றால் கர்நாடகாவுக்கு மாற்ற வேண்டும்.
மேலும் தொடர்ந்து பீகார் உள்ளிட்ட இடங்களில் புதிதாக வழக்கு பதியப்பட்டு உள்ளது. இது வேண்டும் என்றே அலைக்கழிக்க வேண்டும் என்ற நோக்கம் ஆகும் என்றனர்.
இதையடுத்து நீதிபதிகள் கூறும்போது, இந்த வழக்கில் அனைத்து எதிர் மனுதாரர்களும் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கிறோம்.
அதேவேளையில் சனாதன தர்மம் விவகாரத்தில் உதயநிதி மீது புதிதாக எந்த வழக்கும் பதிவு செய்யக்கூடாது. ஏற்கனவே உதயநிதி மீது மேல் நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என்ற இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிடுகிறோம் என்றனர்.
மேலும் இவ்வழக்கை ஏப்ரல் 21-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.