ஒடிசாவில் காவி நிறத்திற்கு மாறும் அரசுப் பள்ளிக்கூடங்கள்
- பச்சை நிறத்தில் இருந்த பள்ளி சீருடைகள் ஏற்கனவே கலர் மாற்றப்பட்டுள்ளது.
- தற்போது பள்ளி கட்டிடங்களின் நிறங்களை மாற்ற பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
ஒடிசாவில் இரண்டு தசாப்தங்களாக பிஜு ஜனதா தளம் ஆட்சி செய்து வந்தது. அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் 2000 முதல் 2024 வரை முதல்வராக இருந்தார். பிஜு ஜனதா தளம் கட்சியின் கொடி பச்சை நிறத்தில் இருக்கும். இதனால் ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசு கட்டிடங்கள் பச்சை நிறத்தில் காட்சியளித்தன.
ஒடிசா மாநிலத்தில் அரசின் அதிகாரப்பூர்வ கட்டிங்கள் உள்பட அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு கட்டிடங்கள் பச்சை நிறத்தில்தான் காட்சியளித்தன.
கடந்த ஆண்டு மக்களவை தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
அதில் இருந்து பச்சை நிறம் மெல்லமெல்ல மறைந்து வருகிறது. முதலில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளின் சீருடை நிறம் பச்சையில் இருந்து லைட் பிரவுன் மற்றும் மெரூன் நிறங்களுக்கு மாறியது.
இந்த நிலையில் அரசு பள்ளிக்கூடங்களில் அடர்ந்த ஆரஞ்ச் நிறம் (orange-tan) பார்டர் உடன் லைட் ஆரஞ்ச் நிறமாக மாற்ற வேண்டும் என ஒடிசா பள்ளி கல்வி திட்ட ஆணையம் (OSEPA) அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதனால் பச்சை நிறமாக காட்சியளித்து வந்த அரசு பள்ளிக்கூடங்கள் இனிமேல் காவி நிறமாக காட்சியளிக்க இருக்கிறது.
பாஜக அரசின் இந்த முடிவு, கல்வியை காவிமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதி என எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் குற்றம்சாட்டியுள்ளது.