இந்தியா
null

வரி தீட்ட டிரம்ப் தீவிரம்.. அமெரிக்காவில் மத்திய அமைச்சர் பேச்சுவார்த்தை.. தப்பிக்குமா இந்தியா?

Published On 2025-03-06 12:12 IST   |   Update On 2025-03-06 12:59:00 IST
  • வர்த்தக போர் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.
  • இந்திய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பிரேசில், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் அதிக வரி விதிப்பதை அடுத்து, அந்த நாடுகளுக்கு அதிக வரி வசூலிக்கும் திட்டம் ஏப்ரல் 2-ம் தேதி அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து இருந்தார். இந்த விவகாரம் காரணமாக இரு நாடுகள் இடையே வர்த்தக போர் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில், வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வரி விதிப்பில் சூமூக உடன்பாடு எட்டப்படும் என்று நம்புவதாக இந்திய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதிக வரி வசூலிக்கப்படுவதை எதிர்த்து வரி விதிப்பை அதிகப்படுத்தும் திட்டத்தை அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார். இவரது அறிவிப்பு உலகளவில் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஒரு வார காலம் அமெரிக்க பயணம் மேற்கொண்டு வர்த்தக விவகாரங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள இருப்பதை அடுத்து, அதிபர் டிரம்ப் இவ்வாறு அறிவித்துள்ளார்.

"மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான இந்திய அதிகாரிகள் மிக முக்கிய கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளனர். 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து இருதரப்புக்கும் அதிக பாதிப்புகள் இன்றி ஒப்பந்தம் அமலுக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன," என்று இந்த விவகாரம் குறித்த விவரங்கள் அறிந்த பெயர் குறிப்பிட விரும்பாத நபர் தெரிவித்துள்ளார்.

அதிக வரி விதிக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், டிரம்ப்-இன் வரி தீட்டும் நடவடிக்கையில் இருந்து இந்தியா தப்பிக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags:    

Similar News