இந்தியா

பார்வைக்குறைபாடு கொண்டவர்கள் நீதித்துறை பணியில் சேரலாம்- சுப்ரீம் கோர்ட்

Published On 2025-03-04 08:26 IST   |   Update On 2025-03-04 08:26:00 IST
  • நீதித்துறை பணிக்கான ஆள்தேர்வில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் எவ்விதமான பாரபட்சத்தையும் சந்திக்கக்கூடாது.
  • தகுதி இருக்கும்பட்சத்தில் காலிப்பணியிடங்களில் அவர்களை நியமிக்கலாம்.

புதுடெல்லி:

1994-ம் ஆண்டின் மத்தியபிரதேச அரசு பணியாளர் தேர்வு விதிமுறைகளின் 6ஏ மற்றும் 7 விதிகள், பார்வைக்குறைபாடு கொண்டவர்களும், குறைந்த அளவு பார்வை கொண்டவர்களும் நீதித்துறை பணியில் சேருவதற்கு தடை விதிக்கின்றன.

எனவே, அந்த விதிகளை செல்லாது என்று அறிவிக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சில மாநிலங்களில், பார்வைக்குறைபாடு கொண்டவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுவதற்கு எதிராகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டும் தானாக முன்வந்து ஒரு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதுபோல், விசாரிக்கப்பட்ட 6 மனுக்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று இவ்வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தது. பார்வைக்குறைபாடு கொண்டவர்களுக்கு எதிரான மத்தியபிரதேச அரசு பணியாளர்கள் தேர்வு விதிமுறைகளின் சில விதிகளை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.

தீர்ப்பில் நீதிபதி ஆர்.மகாதேவன் கூறியிருப்பதாவது:-

நீதித்துறை பணிக்கான ஆள்தேர்வில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் எவ்விதமான பாரபட்சத்தையும் சந்திக்கக்கூடாது. எனவே, அவர்களையும் சேர்ப்பதை உறுதிசெய்யும்வகையில், மாநில அரசுகள் உடன்பாடான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்-ஆப் மூலமாகவோ, அல்லது வேறு தடைக்கல் மூலமாகவோ மாற்றுத்திறனாளிகளை விலக்கும்வகையில் மறைமுகமாக பாரபட்சம் காட்டினால், சமத்துவத்தை உறுதி செய்ய கோர்ட்டு தலையிட வேண்டும்.

மாற்றுத்திறன் காரணமாக எந்த விண்ணப்பதாரருக்கும் பணிவாய்ப்பை பரிசீலிப்பதை மறுக்கக்கூடாது. பார்வைக்குறைபாடு கொண்டவர்களுக்கு நீதித்துறை பணியில் சேரும் வாய்ப்பை மறுக்கக்கூடாது.

இந்த உத்தரவு காரணமாக, நீதித்துறை ஆள்தேர்வில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள், அப்பணிக்கு பரிசீலிக்கப்பட உரிமை பெற்றவர்கள் ஆகிறார்கள். தகுதி இருக்கும்பட்சத்தில் காலிப்பணியிடங்களில் அவர்களை நியமிக்கலாம்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News