இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன விஞ்ஞானி சிறையில் அடைப்பு
- கைதான விஞ்ஞானியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
- இவர் அரசு பணி நிமித்தமாக 5 முதல் 6 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.
புனே :
டி.ஆர்.டி.ஓ. என அழைக்கப்படும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்துக்கு சொந்தமான ஆய்வகம் மராட்டிய மாநிலம் புனேயில் உள்ளது. இதில் இயக்குனராக பணியாற்றி வந்தவர் பிரதீப் குருல்கர்.
இவர் பாகிஸ்தானை சேர்ந்த உளவு அமைப்பு ஏஜென்டுடன் வாட்ஸ்அப் மூலம் தொடர்பில் இருந்ததாக கடந்த 3-ந் தேதி மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கைதான விஞ்ஞானியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்தவர்கள் பெண்ணை வைத்து ஆபாசமாக பேசி விஞ்ஞானியை அவர்களது வலையில் வீழ்த்தி உள்ளனர். பின்னர் அதன் மூலம் அவர்கள் விஞ்ஞானியிடம் இருந்து இந்திய ராணுவம் குறித்த ரகசிய தகவல்களை கறந்தது தெரியவந்தது.
இவர் அரசு பணி நிமித்தமாக 5 முதல் 6 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இந்த பயணத்தின் போது அவர் யார், யாரை எல்லாம் சந்தித்தார் என்ற தகவல்களை சேகரித்து விசாரிக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் விஞ்ஞானியின் விசாரணை காலம் முடிந்ததை அடுத்து அவரை நேற்று போலீசார் புனேயில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு விஞ்ஞானியை வருகிற 29-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அதன்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விஞ்ஞானி தனக்கு ரத்த உயர் அழுத்தம் இருப்பதால் அதற்கான மருந்து மாத்திரைகளை ஜெயிலுக்கு எடுத்து செல்லவும், வீட்டில் இருந்து உணவு கொடுத்துவிடவும் அனுமதி கேட்டார். ஆனால் மருந்து மாத்திரை எடுத்து செல்ல அனுமதி அளித்த கோர்ட்டு, வீட்டு உணவுக்கு அனுமதி மறுத்துவிட்டது.