'சிவசக்தி புள்ளி' 370 கோடி ஆண்டுகள் பழமையானது- இஸ்ரோ தகவல்
- நிலவுக்கும் பூமிக்குமான வரலாற்று தொடர்பு குறித்த பல்வேறு முக்கியமான தரவுகளையும் பெற்றுள்ளது.
- ஒரு புதிய பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டது.
நிலவின் தென்துருவத்தில் எந்த நாடுகளுமே இறங்காத இடத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு 23-ந்தேதி வெற்றிகரமாக தரை இறங்கி, 13 நாட்கள் நிலவில் பல முக்கிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு சாதனை படைத்தது.
நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா தனது 'சந்திரயான்-3' திட்டம் மூலம் பெற்றது.
நிலவில் 'சந்திரயான்-3' தரையிறங்கிய இடத்திற்கு 'சிவசக்தி புள்ளி' என்று பிரதமர் நரேந்திர மோடி பெயரிட்டார். சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய இடம் 370 கோடி (3.7 பில்லியன்) ஆண்டுகள் பழமையானது என்று விஞ்ஞானிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பூமியில் முதன்முதலாக நுண்ணுயிர் தோன்றியதும் 370 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் என விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டறிந்து உள்ளனர். இது நிலவுக்கும் பூமிக்குமான வரலாற்று தொடர்பு குறித்த பல்வேறு முக்கியமான தரவுகளையும் பெற்றுள்ளது.
'சந்திரயான்-3' விண்கலம் நிலவில் தரையிறங்கிய இடத்தின் முதல் வரைபடம் மூலம் இந்த தகவல் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. கரடுமுரடாக உள்ள பகுதி, சமவெளி பகுதி, ஓரளவுக்கு சமவெளியாக உள்ள பகுதி என 3 வெவ்வேறு தன்மைகள் கொண்ட நிலப்பரப்புகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதில், ஓரளவுக்கு சமவெளியாக உள்ள பகுதியில்தான் சந்திரயான்- 3 தரையிறங்கிய இடமான 'சிவசக்தி புள்ளி' உள்ளது.
சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு 14 கிலோ மீட்டர் தெற்கே 540 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு புதிய பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டது. சிறிய பாறைத் துண்டுகள் மேற்குப் பக்கத்தில் அமைந்திருந்தன, அவை அருகில் உள்ள 10 மீட்டர் அகலமுள்ள பள்ளத்தில் இருந்து தோன்றியிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறும்போது, 'நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 தரையிறங்கியதே மிகப்பெரும் சாதனைதான். தற்போது அமைவிட ரீதியில் அப்பகுதி பழமையானது என கண்டறியப்பட்டுள்ளது. பூமியுடன் நிலவு எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதை அறிய இந்த கண்டுபிடிப்பு உதவுகிறது. இந்த கண்டுபிடிப்பு மிக முக்கியமானது, மதிப்புமிக்கது' என்றார்.
ஆமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வக விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய இடத்தில் நில அமைப்பியல் மற்றும் நில அடுக்கு ஆகியவற்றை ஆராய்ந்தனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் மேம்பட்ட 'இமேஜிங்' கருவிகளை பயன்படுத்தி, நிலவின் பள்ளங்கள் மற்றும் பாறை அமைப்புகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.