இந்தியா

ஊழல் தடுப்பு சட்டத்தை நிறுத்திய டிரம்ப்.. ஜெட் வேகத்தில் எகிறிய அதானி குழும பங்குகள்

Published On 2025-02-11 17:03 IST   |   Update On 2025-02-11 17:03:00 IST
  • FCPA சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதில் அதானிக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.
  • அதிகபட்சமாக அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் பங்கு விலை 4.28 சதவீதம் உயர்ந்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதைத் தடைசெய்யும் சட்டத்தை நிறுத்தும் உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீட்டாளர்களை அதானி குழுமம் தவறாக வழிநடத்தி சுமார் 750 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதாக அமெரிக்காவின் FCPA சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதில் அதானிக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டம் (FCPA) என்று அழைக்கப்படும் இதன் கீழ் இந்திய தொழிலதிபர் அதானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த சட்டதையே டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். அதற்கு பதிலாக புதிய விதியை உருவாக்கும்படி அட்டார்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளார். பிப்ரவரி 13 ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் இந்த அறிவிப்பானது வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து இன்று அதானி குழும பாங்குகள் கணிசமான அளவு உயர்ந்துள்ளன. அதிகபட்சமாக அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் பங்கு விலை 4.28 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதானி பவர் லிமிடெட் உடைய ஒரு பங்கின் விலை 4.17 சதவீதம் உயர்ந்து ரூ.511.90 ஆக இருந்தது. அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் 3.34 சதவீதம் உயர்ந்து ரூ.985.90 ஆக உயர்ந்து அதிக லாபம் ஈட்டியது. நியூ டெல்லி டெலிவிஷன் லிமிடெட்டின் பங்கு விலையும் 3.84 சதவீதம் உயர்ந்து ரூ.145 ஆக உயர்ந்தது.

அதே நேரத்தில், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட், அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் மற்றும் அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் சோன் லிமிடெட் பங்குகளும் கணிசமான அளவு உயர்ந்தன. 

Tags:    

Similar News