மகா கும்பமேளாவுக்கு சென்று திரும்பும் வழியில் கோர விபத்து.. 7 பேர் உயிரிழப்பு
- ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள சிஹோரா பகுதிக்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் மினி பஸ் வந்துகொண்டிருந்தது.
- படுகாயமடைந்த மேலும் 5 பேரை உள்ளூர் மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. மகா சிவராத்திரி விழா முன்னிட்டு 26-ந்தேதி புனித நீராடலுடன் மகா கும்பமேளா விழா நிறைவடைகிறது.
இந்நிலையில் மகா கும்பமேளாவுக்கு சென்று திரும்பிய ஐதராபாத்தை சேர்த்த பக்தர்கள் வந்த வாகனம் ஒன்று விபத்தில் சிக்கி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் நாச்சரம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் மகா கும்பமேளாவில் வழிபாடு செய்தபின்னர் மினி பஸ்ஸில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள சிஹோரா பகுதிக்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 8:30 மணியளவில் அவர்களது மினி பஸ் வேகமாக வந்துகொண்டிருந்தது.
அப்போது தவறான பாதையில் எதிரே வந்த சிமென்ட் ஏற்றிச் சென்ற லாரி மீது மினி பஸ் மோதியுள்ளது. இதில் மினி பஸ்ஸில் வந்த பத்தர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மேலும் 5 பேரை உள்ளூர் மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.