மகா கும்பமேளா: பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் 45 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடல்- உ.பி. அரசு தகவல்
- மவுனி அமாவாசை தினத்தன்று 8 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
- மகர் சங்கிராந்தி நாளில் 3.35 கோடி பக்தர்களும், பசந்த் பஞ்சமி நாளில் 2.57 கோடி பக்தர்களும் புனித நீராடியுள்ளனர்.
மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. மகா சிவராத்திரி விழா முன்னிட்டு 26-ந்தேதி புனித நீராடலுடன் மகா கும்பமேளா விழா நிறைவடைகிறது.
மகா கும்பமேளாவை முன்னிட்டு திரிவேணி சங்கமமான பிரயாக்ராஜில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். மகா கும்பமேளா தொடங்கியபோது சுமார் 40 கோடி மக்கள் புனித நீராட பிரயாக்ராஜ் வருகை தருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கும்பமேளா முடிவடைய இன்னும் 15 நாட்கள் இருக்கும் நிலையில், இதுவரை 45 கோடி பக்தர்களுக்கு மேல் புனித நீராடியுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
மகர் சங்கிராந்தி, மவுனி அமாவாசை, பசந்த் பஞ்சமி நாட்களில் கட்டுக்கடங்காத வகையில் பக்தர் வருகை தந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமையான இன்று காலை 10 மணி வரை 74.96 லட்சம் மக்கள் புனித நீராடியுள்ளனர். மவுனி அமாவாசை தினத்தன்று 8 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகர் சங்கிராந்தி நாளில் 3.35 கோடி பக்தர்களும், பசந்த் பஞ்சமி நாளில் 2.57 கோடி பக்தர்களும் புனித நீராடியுள்ளனர்.
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்டோர் புனித நீராடியுள்ளனர். வெளிநாட்டு பக்தர்கள் ஏராளமானோர் பிரயாக்ராஜியில் புனித நீராடியுள்ளனர்.
அதேபோல் பாலிவுட் பிரபலங்கள் பலரும் புனித நீராடியுள்ளனர்.
மவுனி அமாவாசை முன்னிட்டு கடந்த மாதம் 29-ந்தேதி அதிகாலையில் ஏராளமான மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பக்தர்கள் உயிரிழந்தனர். 60 பேர் காயம் அடைந்தனர். ஆனால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம். இதை உத்தர பிரதேச அரசு மறைக்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.