வியர்வை, ரத்தத்தைச் செலுத்தி எங்கள் கட்சியை உருவாக்கியுள்ளோம்: காங்கிரசுக்கு பகவந்த் மான் பதிலடி
- பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம் எல் ஏக்கள் தங்களுடன் தொடர்பில் உள்ளனர் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
- ஆம் ஆத்மி தலைவர்கள் பேராசை இல்லாத அர்ப்பணிப்புள்ளவர்கள் என்றார் முதல் மந்திரி.
புதுடெல்லி:
பஞ்சாப் மாநிலத்தின் ஆளும் கட்சியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தனது கட்சியுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் அணி மாறலாம் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
தலைநகர் டெல்லியில் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான், தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் கட்சி தலைவர் கெஜ்ரிவாலுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், பகவந்த் மான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்கள், பிரதாப் சிங் பஜ்வா கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
பஜ்வா எங்கள் எம்.எல்.ஏ.க்களை எண்ணாமல், டெல்லியில் காங்கிரசுக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என பார்க்க வேண்டும்.
ஆம் ஆத்மி தலைவர்கள் பேராசை இல்லாத அர்ப்பணிப்புள்ளவர்கள்.
20 எம்.எல்.ஏ.க்கள் அல்லது 40 எம்.எல்.ஏ.க்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக பாஜ்வா கூறி வருகிறார். அதை அவர்கள் சொல்லட்டும்.
பெரும்பாலான மாநிலங்களைவிட பஞ்சாபின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. எல்லை மாநிலமாக இருப்பதால் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும், அதைச் செய்து வருகிறோம்.
மாநிலத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள மக்களிடையே எங்களின் வியர்வை மற்றும் ரத்தத்தைச் செலுத்தி இந்தக் கட்சியை உருவாக்கியுள்ளோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.