ஏ.டி.எம்.களில் 24 மணி நேரமும் காவலாளிகளை நிறுத்த தேவையில்லை- சுப்ரீம் கோர்ட்
- சுப்ரீம் கோர்ட்டில் வங்கிகள் மேல்முறையீடு செய்தன.
- உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.
புதுடெல்லி:
கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம், அசாம் மாநிலத்தில் ஒரு வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக ஏமாற்றி, ஒருவரிடம் ரூ.35 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் நடந்தது. பத்திரிகையில் அச்செய்தியை பார்த்த அசாம் ஐகோர்ட்டு, தானாக முன்வந்து அதை வழக்காக எடுத்துக் கொண்டது. ரிசர்வ் வங்கி, சம்பந்தப்பட்ட வங்கி, மத்திய அரசு, அசாம் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
போலீஸ் டி.ஜி.பி. தாக்கல் செய்த பதில் மனுவில், அனைத்து வங்கி ஏ.டி.எம்.களின் பாதுகாப்புக்கு ஒரு செயல்திட்டத்தை முன்வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு, அதை அமல்படுத்துமாறு மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஏ.டி.எம்.களில் வரிசையை ஒழுங்குபடுத்தவும், ஒரே நேரத்தில் ஒருவரை மட்டும் உள்ளே அனுமதிக்கவும் ஏ.டி.எம்.களில் 24 மணி நேரமும் காவலாளிகளை நிறுத்துமாறு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வங்கிகள் மேல்முறையீடு செய்தன. அசாம் ஐகோர்ட்டு உத்தரவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், நேற்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய், வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. வங்கிகள் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:-
அசாம் மாநிலத்தில் சுமார் 4 ஆயிரம் ஏ.டி.எம்.கள் உள்ளன. அனைத்து ஏ.டி.எம்.களிலும் 24 மணி நேரமும் காவலாளிகளை நியமிப்பது நடைமுறை சாத்தியமற்றது. உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அசாம் ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்தனர். ஏ.டி.எம்.களில் 24 மணி நேரமும் காவலாளிகளை நிறுத்த தேவையில்லை என்று கூறினர்.