இந்தியா

சோரோஸ் நிதி அமைப்புகளுடன் சோனியாவுக்கு தொடர்பு - குற்றம் சுமத்திய பாஜக - கொந்தளித்த காங்கிரஸ்

Published On 2024-12-09 07:06 GMT   |   Update On 2024-12-09 07:06 GMT
  • ராகுல் காந்தி அதானிக்கு எதிராக பேசிய பத்திரிகையாளர் சந்திப்பை ஜார்ஜ் சோரோஸிடம் நிதியுதவி பெறும் ஊடகங்கள்தான் ஒளிபரப்பு செய்தனர்
  • காங்கிரஸ் எம்.பி சசி தரூர் ஜார்ஜ் சோரோஸ் என்னுடைய பழைய நண்பர் என கூறியிருகிறார்

ஹங்கேரி-அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் உடைய நிதி அளிக்கும் அமைப்புகளுடன் சோனியா காந்திக்கு தொடர்பு உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் செய்யாமல் நான் எழுப்ப விரும்பும் முக்கியமான பிரச்சனை இது. சோனியா காந்திக்கும், ஜார்ஜ் சோர்ஸ் நிதி அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு தீவிரமானது. அதை அரசியல் ரீதியாக மாற்ற நாங்கள் விரும்பவில்லை,

ஆனால் காஷ்மீரை தனிநாடு என கூறும் சக்திகளோடு காங்கிரஸ் இணைந்திருக்கிறது. ஆசிய பசிஃபிக் ஜனநாயக தலைவர்களின் கூட்டமைப்பில் சோனியா காந்தி இணை தலைவராக இருக்கிறார். இந்த அமைப்புக்கு ஜார்ஜ் சோரோஸின் அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.

 

இந்த அமைப்புடன் சோனியா காந்தி தொடர்பில் இருப்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு அரசியல் தலையீடு சான்றாகும். நம் நாட்டில் பொருளாதாரத்தின் மீது இவர்கள் தாக்குதல் நடத்த கூடும்.

ராகுல் காந்தி அதானிக்கு எதிராக பேசிய பத்திரிகையாளர் சந்திப்பை ஜார்ஜ் சோரோஸிடம் நிதியுதவி பெறும் ஊடகங்கள்தான் ஒளிபரப்பு செய்தனர் என்று தெரிவித்தார்.

 

மேலும் ராகுல் காந்தியுடன் எதிர்க்கட்சி எம்பிக்கள் அதானி விவகாரத்தை எழுப்பி மோடிக்கும் அதானிக்கும் உள்ள தொடர்பு குறித்த முழக்கங்களுடன் 5 வது நாளாக பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பேசிய கிரண் ரிஜிஜூ,

நாங்கள் பாராளுமன்றத்தை நடத்த விரும்புகிறோம். சில பிரச்சனைகள் அரசியல் ரீதியானவை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன், ஆனால் இந்தியாவிற்கு வெளியே உள்ள சக்திகள் இந்தியாவை மீறி இந்தியாவிற்கு எதிராக போராட முயல்கின்றன என்பது கவலை அளிக்கிறது.

காங்கிரஸ் எம்.பி சசி தரூர் ஜார்ஜ் சோரோஸ் என்னுடைய பழைய நண்பர் என கூறியிருகிறார் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே இந்த குற்றச்சாட்டு மீது அமெரிக்க தூதரகம் அதிருப்தி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

பதிலடி 

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், இவை அனைத்தும் பாஜகவின் கற்பனையான பொய்கள் என்று தெரிவித்துள்ளார். நாங்கள் எப்போதும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்காக இருக்கிறோம். நாங்கள் தேசபக்தர்கள், நாங்கள் தேசியவாதிகள், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான எதையும் நாங்கள் செய்யவில்லை என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய சமாஜ்வாதி கட்சி எம்பி ராம் கோபால் யாதவ், இது பாஜகவின் வழக்கமான தந்திரம். பொய் குற்றச்சாட்டுகளை கூறுவது பாஜகவின் வழக்கமாகிவிட்டது. அவர்களின் குற்றச்சாட்டுகள் எதுவும் இன்றுவரை உண்மையாக மாறவில்லை என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News