தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தை எதிர்த்து வழக்கு- சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
- இந்த நியமனம் கேலிக் கூத்தானது என்று அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
- வழக்கை நாளை காலை முதல் வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் ராஜீவ் குமாரின் பதவி காலம் இன்று முடிவடையும் நிலையில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக மூத்த வக்கீல் பிரசாந்த் பூசன் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு நாளை விசாரிக்கப்பட உள்ள நிலையில் இந்த நியமனம் கேலிக் கூத்தானது என்று அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய உத்தரவுகளை மீறும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கை நாளை காலை முதல் வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.
முக்கிய வழக்குகளை விசாரித்த பிறகு தேர்தல் ஆணையர் நியமன வழக்கு விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.