ஓடி, ஒளிய வேண்டாம்! - சோனியா, ராகுலை கிண்டல் செய்த மோடி
- நான் மக்களுக்கு சேவை செய்ய எனது வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்புகிறேன்.
- காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தேர்தலுக்கு முன்பே தோல்வி பயத்தில் தொகுதிக்கு வராமல் இருக்கிறார்கள்.
மேற்குவங்கம்:
உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் 15 தொகுதி வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை மட்டும் அறிவிக்காமல் இருந்தது
இதனிடையே அமேதியில் ராகுலும், ரேபரேலி தொகுதியில் பிரியங்காவும் களம் இறக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீண்ட இழுபறிக்கு பிறகு ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலும், கே.எல். சர்மா அமேதி தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதை மேற்குவங்கத்தில் இன்று நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:-
எதிர்க்கட்சிகளால் வளர்ச்சியை கொண்டு வர முடியாது. வாக்குக்காக சமூகத்தை பிளவுபடுத்துவது மட்டுமே அவர்களுக்கு தெரியும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர், பாகீரதியில் வெறும் 2 மணி நேரத்தில் இந்துக்களை மூழ்கடித்து விடுவார்கள் என்று வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இது என்ன பேச்சு மற்றும் அரசியல் கலாச்சாரம்? இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. மேற்கு வங்கத்தில் இந்துக்களை இரண்டாம் குடிமக்களாக திரிணாமுல் காங்கிரஸ் ஆக்கியது போல் தெரிகிறது.
சந்தேஷ்காலியில் எங்கள் தலித் சகோதரிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டது. இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை எழுந்தது. ஆனால் குற்றவாளியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாதுகாத்தது.
இதற்கு குற்றவாளியின் பெயர் ஷாஜகான் ஷேக் என்பதுதான் காரணமா? ஒரு வாக்கு வங்கி மனித நேயத்திற்கு மேல் இருக்க முடியுமா?
காங்கிரஸ் வெளிப்படையாகவே ஓட்டு ஜிகாத்தை ஆதரிக்கிறது. அதை இந்தியா கூட்டணியும் ஆதரிக்கிறது.
அரசியலமைப்பை மாற்றவும், தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டைப் பறிக்கவும், ஜிகாதி வாக்கு வங்கிக்கு இடஒதுக்கீடு வழங்கவும் காங்கிரஸ் விரும்புகிறது.
இங்கு நான் தலித், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் சகோதரர்களுக்காக வந்துள்ளேன். எஸ்.சி, எஸ்.டி.யினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும். பிற்படுத்தப்பட்டோருக்கு எதிர்க்கட்சிகள் எதுவும் செய்யவில்லை. வாக்கு வங்கி அரசியலை எதிர்க்கட்சிகள் நிறுத்தி கொள்ள வேண்டும்.
நான் மக்களுக்கு சேவை செய்ய எனது வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்புகிறேன்.
மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாகத் தருமாறு காங்கிரசுக்கு நான் சவால் விடுத்தேன். ஆனால் அவர்கள் பதில் கூறாமல் அமைதியாக இருக்கிறார்கள்.
காங்கிரஸ் இளவரசர் (ராகுல்காந்தி) மிகவும் பயந்து போய் இருக்கிறார். அவர் அமேதி தொகுதியை பார்த்து அங்கு போட்டியிடாமல் பயந்து ஓடி விட்டார். தற்போது அவர் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். அமேதியில் போட்டியிட பயம் ஏற்பட்டதால் தொகுதி மாறியுள்ளார்.
ராகுல்காந்தி ஏற்கனவே தோல்வி பயத்தில் உள்ளார். அவர் வயநாடு தொகுதியில் தோல்வியை சந்திப்பார். ரேபரேலி தொகுதியில் அவருக்கு தோல்விதான் ஏற்படும்.
வயநாட்டில் தோற்று விடுவோம் என அவருக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது. இதனால் அவர் புதிய தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கும் அவருக்கு தோல்வி காத்திருக்கிறது.
அடுத்து அவர் மூன்றாவது தொகுதியை தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தேர்தலுக்கு முன்பே தோல்வி பயத்தில் தொகுதிக்கு வராமல் இருக்கிறார்கள்.
அச்சப்பட வேண்டாம் என அனைவரையும் பார்த்து கூறும் அவர்கள், அமேதி தொகுதியை பார்த்து அச்சப்படுகின்றனர்.
நான் அவர்களை பார்த்து கூறுகிறேன் அச்சப்பட வேண்டாம். ஓடி, ஒளிய வேண்டாம்.
சோனியா காந்தி தேர்தலில் போட்டியிட பயந்து மேல்சபை எம்.பி ஆகி உள்ளார். இப்படிப்பட்டவர்களால் எப்படி ஆட்சி அமைக்க முடியும்? என்றார்.