இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியை கொன்ற கணவர்- சாலை விபத்து போல் நாடகமாடியது அம்பலம்
- போலீசார் விசாரணையில் கூலிப்படை மூலம் கணவர் மனைவியை கார் ஏற்றி கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
- மனைவியை கொலை செய்வதற்காக கூலிப்படைக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் சந்த். இவரது மனைவி ஷாலு.
கடந்த அக்டோபர் மாதம் 5-ந்தேதி ஷாலு தனது உறவினர் ராஜூவுடன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது கார் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் இருவருமே சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இதை போலீசார் சாலை விபத்தாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த வழக்கும் நிறைவு பெற்றுவிட்டது.
இதற்கிடையே ஷாலு மரணம் அடைந்தால் அவரது பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணமான ரூ.1.90 கோடியை மகேஷ் சந்த் பெற்றார். இந்த விவரம் போலீசாருக்கு தெரிந்தபோது விபத்து வழக்கை மீண்டும் விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையில் அது விபத்து அல்ல என்றும், மனைவி ஷாலுவை திட்டமிட்டு அவரது கணவர் மகேஷ் சந்த் படுகொலை செய்ததும், தெரியவந்தது.
தனது மனைவி பெயரில் இருந்த காப்பீட்டு தொகையை பெறுவதற்காக அவர் சாலை விபத்து போல நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.
கூலிப்படை மூலம் அவர் மனைவியை கார் ஏற்றி கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அவர் கூலிப்படைக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் மகேஷ் சந்த் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர்.