இந்தியா

அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு- 4 நாள் வன்முறையால் ரெயில்வேக்கு ரூ.700 கோடி இழப்பு

Published On 2022-06-19 13:16 IST   |   Update On 2022-06-19 13:16:00 IST
  • வட மாநிலங்களில் வன்முறை வரலாறு காணாத வகையில் இருக்கிறது.
  • குறிப்பாக பீகார், உத்தரபிரதேசத்தில் தான் அதிக அளவில் வன்முறை நிகழ்ந்துள்ளது.

பாட்னா:

ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில் ஒப்பந்த அடிப்படையிலான அக்னிபாத் என்ற புதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையானது.

பீகார், உத்தரபிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கான உள்ளிட்ட 9 மாநிலங்களில் போராட்டம் பரவி உள்ளது.

வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள் ரெயில்களை தீ வைத்து கொளுத்தினர். ரெயில் நிலையங்களை சூறையாடினர். பஸ்கள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

வட மாநிலங்களில் வன்முறை வரலாறு காணாத வகையில் இருக்கிறது. குறிப்பாக பீகார், உத்தரபிரதேசத்தில் தான் அதிக அளவில் வன்முறை நிகழ்ந்துள்ளது.

4 நாட்கள் நடந்த வன்முறையில் ரெயில்வே துறைக்கு ரூ.700 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. பீகாரில் ரெயில்வேயில் 60 பெட்டிகள் தீ வைக்கப்பட்டன. 11 என்ஜின்கள் எரிக்கப்பட்டன. 15 மாவட்டங்களில் ரெயில் நிலையம் சூறையாடப்பட்டன.

ரெயில்வேக்கு சொந்தமான ரூ.700 கோடி சொத்துக்கள் வன்முறையின் போது சேதம் அடைந்ததாக கிழக்கு மத்திய ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பாளர் விஜேந்திர குமார் தெரிவித்தார்.

பீகாரில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 718 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 138 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. சி.சி.டி.வி. கேமிரா மூலம் அடையாளம் காணப்பட்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைதானார்கள்.

Tags:    

Similar News