இந்தியா

சோனியா காந்தியை அம்மனாக சித்தரித்து கட்-அவுட், போஸ்டர்- சனாதன தர்மத்துக்கு எதிரானது என பா.ஜ.க. ஆவேசம்

Published On 2023-09-19 10:14 IST   |   Update On 2023-09-19 10:14:00 IST
  • கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களை வரவேற்று பல இடங்களில் கட்-அவுட் பேனர்கள் வைத்திருந்தனர்.
  • தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களை வரவேற்று பல இடங்களில் கட்-அவுட் பேனர்கள் வைத்திருந்தனர். அதில் சோனியா காந்தியை அம்மன் வேடத்தில் சித்தரித்து கட் அவுட்டுகள் பேனர்கள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.

சோனியா காந்தி அம்மன் வேடத்தில் நகை கிரீடம் அணிந்தபடி அதில் காட்சியளித்தார்.

மேலும் அவரது வலது கையில் இருந்து தெலுங்கானா தோன்றுவது போல வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.

பெரிய அளவில் சோனியா காந்தியை தெலுங்கானா மாநிலத்தின் அன்னை என அதில் எழுதியுள்ளனர்.

இது தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அந்த மாநில பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய சுற்றுலாத்துறை மந்திரியும், தெலுங்கானா மாநில பாஜக தலைவருமான ஜி.கிஷன் ரெட்டி, சோனியா காந்தியை 'தெலுங்கானா தாய்' போல் சித்தரிப்பது சனாதன தர்மத்தை அவமதிக்கும் செயல் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

"பாரதம் முழுவதும், சக்தி பெண் வடிவமும், தாய் தேவியின் பல்வேறு வெளிப்பாடுகளும் சனாதன தர்மத்தில் வழிபடப்படுகின்றன. தெலுங்கானாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கிராம தேவதை உள்ளது, அந்த கிராமத்தை காக்கும் மற்றும் மக்களுக்கு பலம் தரும் தெய்வம். கிராமத்து மக்கள் தெய்வத்தின் ஆசீர்வாதத்தை தவறாமல் நாடுகிறார்கள்.

"ஊழல் காங்கிரஸ் தலைவரை தெலுங்கானா அன்னையாக சித்தரித்து ஒரு குடும்பத்திற்காக காங்கிரஸ் கட்சி சனாதன தர்மத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வது அதிர்ச்சியளிக்கிறது" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பாரத் மாதா கி ஜெய் என்பது கட்சி ஒழுக்கத்திற்கு எதிரானது என ஒரு காலத்தில் கூறினார்கள். தற்போது சோனியா காந்தியை பாரதமாதாவிற்கு இணையாக சமன் செய்வது போல அம்மன் வேடத்தில் சித்தரித்துள்ளனர்.

இது முற்றிலும் வெட்கக்கேடானது என கடுமையாக பா.ஜ.க.வினர் விமர்சனம் செய்துள்ளனர்.

Tags:    

Similar News