இந்தியா

சூனியம் செய்வதாக சந்தேகம்: மூதாட்டிக்கு இரும்புக் கம்பியால் சூடு.. சிறுநீரை குடிக்க சித்ரவதை

Published On 2025-01-18 18:10 IST   |   Update On 2025-01-18 18:10:00 IST
  • அக்கம்பக்கத்தினர் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பிடித்துச் சென்றனர்.
  • சிறுநீரை குடிக்கவும், நாய் மலத்தை சாப்பிடவும் வற்புறுத்தினர்.

மகாராஷ்டிராவில் மூதாட்டி ஒருவர் சூனியம் செய்வதாக சந்தேகப்பட்டு அவரை கிராமத்தினர் சித்ரவதை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் உள்ள ரெத்யகேடா கிராமத்தைச் சேர்ந்த 77 வயது மூதாட்டி கடந்த டிசம்பர் 30 அன்று அக்கம்பக்கத்தினரால் இந்த சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

வெளியூருக்கு வேலைக்கு சென்ற அவரின் மகனும் மருமகளும் ஜனவரி 5 அன்று திரும்பி வந்து மூதாட்டி இருந்த நிலை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில், அக்கம்பக்கத்தினர் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பிடித்துச்சென்று கட்டைகளால் அடித்தும், அறைந்தும் துன்புறுத்தி உள்ளனர். சூடான இரும்புக் கம்பிகளால் கைகளிலும் கால்களிலும் முத்திரை குத்தி உள்ளனர்.

அவரை சிறுநீரை குடிக்கவும், நாய் மலத்தை சாப்பிடவும் வற்புறுத்தி இருக்கின்றனர். மேலும், கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து அணிவகுத்து ஊர்வலாக அழைத்து சென்றுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரை உள்ளூர் காவல்துறை மறைக்க முயன்றதாக கூறி மூதாட்டியின் மகனும் மருமகளும் தற்போது அமராவதி காவல் நிலையத்தை அணுகியுள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய அமராவதி காவல் கண்காணிப்பாளர் விஷால் ஆனந்த், கிராமம் வனப்பகுதியின் உள்பகுதியில் உள்ளதால், சம்பவத்தை சரிபார்க்க போலீஸ் அதிகாரி அனுப்பப்பட்டு, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

புகார் அளிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட காவல்நிலையம் நடந்த சம்பவத்தை மறைக்க முயன்றதா என்றும் சரிபார்க்கப்படும். அது உறுதியாகும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார். 

Tags:    

Similar News