பெண்களுக்கு இலவச பயணம்... பஸ்சில் ஆட்டோ டிரைவர்கள் பிச்சை எடுத்து போராட்டம்
- ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கேப் போன்ற போக்குவரத்தை பயன்படுத்திய பெண்கள் பஸ்களில் செல்ல தொடங்கி விட்டனர்.
- ஒரு நாளைக்கு ரூ.100 கூட வருமானம் கிடைக்கவில்லை எனவும் குடும்பம் பெரும் கஷ்டத்தில் உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
தெலுங்கானா மாநிலத்தில் அனைத்து அரசு பஸ்களிலும் பெண்களுக்கான இலவச திட்டத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தால் அரசு பஸ்களில் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதற்கு ஆண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆண்களுக்கு தனியாக பஸ்களை இயக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்திற்குப் பின் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கேப் போன்ற போக்குவரத்தை பயன்படுத்திய பெண்கள் பஸ்களில் செல்ல தொடங்கி விட்டனர்.
எனவே, தங்கள் வாழ்வாதாரமே அடிபட்டு போனதாக ஆட்டோ டிரைவர்கள் தொடர்ச்சியாக புகார் அளித்து வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு வடிவங்களில் எதிர்ப்பையும் போராட்டத்தையும் அவர்கள் காட்டத் தொடங்கினர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அரசு பஸ்களுக்குள் ஏறிய ஆட்டோ டிரைவர்கள் அதில் இருந்த பயணிகளிடம் பாத்திரங்கள் ஏந்தியும் கை நீட்டியும் பிச்சை கேட்டு போராட்டம் செய்தனர்.
ஒரு நாளைக்கு ரூ.100 கூட வருமானம் கிடைக்கவில்லை எனவும் குடும்பம் பெரும் கஷ்டத்தில் உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே ஆட்டோ டிரைவர்கள் பஸ்சில் பிச்சை எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.