தெலுங்கானாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரூ.402 கோடி மது விற்பனை
- நடப்பு நிதியாண்டில் ரூ.45,000 கோடி மது விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- குடிபோதையில் இருப்பவர்கள் நள்ளிரவு வீட்டிற்கு செல்ல முன்பதிவு செய்து இருந்தால் அவர்களை இலவசமாக வீடுகளில் கொண்டு சென்று இறக்கி விட்டனர்.
தெலுங்கானா மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரூ.402.62 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 3,82,265 மதுபான பெட்டிகளும், 3,96,114 பீர் பெட்டிகளும் விற்பனை செய்யப்பட்டன. ஐதராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களான ரங்கா ரெட்டி மற்றும் மேட்சல் ஆகிய பகுதிகளில் அதிக மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் தினமும் சராசரியாக ரூ.70 கோடி முதல் ரூ.100 கோடி வரை மதுபானம் விற்பனையாகிறது. டிசம்பர் மாதத்தில் மட்டும், மது விற்பனை பெரும் சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.45,000 கோடி மது விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபத்துகளை தடுக்க சில தனியார் கார் மற்றும் ஆட்டோ நிறுவனங்கள் ஐதராபாத் நகரப் பகுதியில் நேற்று இலவச பயண திட்டத்தை அறிவித்தன.
அதன்படி குடிபோதையில் இருப்பவர்கள் நள்ளிரவு வீட்டிற்கு செல்ல முன்பதிவு செய்து இருந்தால் அவர்களை இலவசமாக வீடுகளில் கொண்டு சென்று இறக்கி விட்டனர். இதனால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.