null
அடமானம் வைத்த நகை பறிபோகும் நிலை.. நேரடியாக பெண்களின் 'தாலி'யை திருடும் மத்திய அரசு -ஜெய்ராம் ரமேஷ்
- வாராக்கடன்களில் தங்க நகைக்கடன் பங்கு மட்டுமே 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
- சுதந்திர இந்தியாவில் பெண்களின் தாலியை திருடும் ஒரே அரசாங்கம் என்ற கீழான தனித்துவத்தை தற்போதைய அரசு பெற்றுள்ளது
பெண்களின் தாலியை மோடி தலைமையாலான மத்திய அரசு திருடுவதாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வங்கிகளில் தாலியை வைத்து கடன் பெற்றுள்ள பெண்கள், கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய குடும்பங்கள் 3 லட்சம் கோடி அளவிலான தங்க நகை கடன் பெற்றுள்ள நிலையில், மந்தமான பொருளாதாரம் காரணமாக அதனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் குடும்பங்கள் உள்ளதாக புள்ளி விவரங்கள் வந்துள்ளன. வங்கிகளில் உள்ள வாராக்கடன்களில் தங்க நகைக்கடன் பங்கு மட்டுமே 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் (NBFC) தங்கக் கடன் வாராக்கடன்கள் (NPA) ஜூன் 2024 நிலவரப்படி 30% உயர்ந்து ரூ.6,696 கோடியாக உயர்ந்துள்ளது. இது மூன்று மாதங்களுக்கு முன்பு ரூ.5,149 கோடியாக இருந்தது.
கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலையில், பெண்களின் தாலி உட்பட பல நகைகள் பறிபோகிறது. மத்திய அரசின் ஒழுங்கற்ற கொள்கை உருவாக்கமும், முன்னுரிமையை திசைதிருப்பி தவறானவற்றுக்கு அளிப்பதுமே இதற்கு முக்கிய காரணம்.
சுதந்திர இந்தியாவில் பெண்களின் தாலியை திருடும் ஒரே அரசாங்கம் என்ற கீழான தனித்துவத்தை தற்போதைய அரசு பெற்றுள்ளது என்று ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். முன்னதாக மக்களவை தேர்தலின்போது பெண்களின் தாலியை காங்கிரஸ் திருடிவிடும் என்று மோடி பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.