இளம் பெண்களை மயக்கி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு- வாலிபர் கைது
- விசாரணையில் பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரிய வந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து நித்யாவை கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் நித்யா (வயது 30). பட்டதாரி வாலிபரான இவர் ஆடம்பரமான வாழ்க்கை வாழ முடிவு செய்தார். அதன்படி தனது தலையில் முடி இல்லாததால் விக்கு வைத்துக் கொண்டார். ஆடம்பரமான விலை உயர்ந்த ஆடைகளை உடுத்திக் கொண்டு சினிமா நடிகர் நடிகைகள் அரசியல் தலைவர்கள் மற்றும் வணிக பிரபலங்களுடன் செல்பி போட்டோ எடுத்து போல மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
திருமண ஆன்லைன் வலைதளங்களில் இவரது படங்களை பார்த்த இளம் பெண்கள் பலரும் இவரை தொடர்பு கொண்டனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நித்யா இளம் பெண்களை காபி ஷாப் மற்றும் ஓட்டல்களுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் இளம் பெண்களின் அனுதாபத்தை பெறுவதற்காக தனது கையில் உள்ள வெட்டு காயங்களை காண்பித்தார்.
இளம் பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர்களது செல்போன் எண்களை வாங்கி நீண்ட நேரம் பேசி மயக்கினார். வாட்ஸ் அப்பில் பெண்களை கவரக்கூடிய வகையில் தகவல்களை அனுப்பினார்.
இதனை உண்மை என நம்பிய இளம் பெண்கள் நித்யாவை திருமணம் செய்து கொள்ள விருப்பமுள்ளதாக அவர்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இளம்பெண்களை ஓட்டலுக்கு அழைத்து சென்று அவர்களுக்கு போதை மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். அப்போது தனது செல்போனில் இளம்பெண்களை நிர்வாண வீடியோ எடுத்துள்ளார் .
ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதாக இளம் பெண்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளார். நித்யாவிடம் சிக்கிய இளம் பெண் ஒருவர் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இளம் பெண்ணின் பெற்றோர் இதுகுறித்து கச்சி பவுலி போலீசில் புகார் செய்தனர்.
விசாரணையில் பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரிய வந்தது. மேலும் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது ஏராளமான இளம் பெண்களின் ஆபாச வீடியோ இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். நித்யா மீது இதுவரை 2 பெண்கள் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து நித்யாவை கைது செய்தனர்.