2024 ரீவைண்ட்: ஆந்திர அரசியலில் அதிரடி காட்டிய சந்திரபாபு நாயுடு
- ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த மே 13ம் தேதி நடந்தது.
- இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 164 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றியது.
அமராவதி:
அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது.
2024 ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலிலும் வெற்றி பெற்று தாமே மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ஜெகன் மோகனுக்கு அம்மாநில மக்கள் அதிர்ச்சியையே பரிசாக அளித்தனர்.
பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த மே 13ம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிட்டது.
எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.க, பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது. காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது.
மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தெலுங்கு தேசம் 135 தொகுதிகளிலும், ஜனசேனா 21 தொகுதிகளிலும், பா.ஜ.க. 8 தொகுதிகளிலும் வென்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மீதமுள்ள 11 தொகுதியில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் கட்சி ஓர் இடத்தில் கூட வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, ஆந்திர மாநில முதல் மந்திரியாக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆந்திர ஆளுநர் அப்துல் நசீர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். துணை முதல் மந்திரியாக பவன் கல்யாண் பொறுப்பேற்றார். இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஒய்.எஸ்.ஆர். காஙகிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் இடையே நடந்த காரசாரமான கருத்து மோதல் ஏற்பட்டது.
மீண்டும் முதல் மந்திரியாக இங்கு நுழைவேன் எனக்கூறி அழுதபடி சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார் சந்திரபாபு நாயுடு.
கடந்த 2014 முதல் 2019 வரை ஆந்திர முதல் மந்திரியாக பதவி வகித்த காலத்தில் மாநில திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.
இப்படி பல்வேறு அரசியல் காரணங்களால் ஆந்திர மாநில மக்கள் ஜெகன் மோகன் ஆட்சியை ஒதுக்கிவிட்டு, தெலுங்கு தேசத்திற்கு அறுதிப்பெருமான்மை ஆதரவு கொடுத்து ஆட்சி அமைக்க வழிவகை செய்தனர்.