Recap 2024

2024 ரீவைண்ட்: விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்த பிரதமர் மோடி

Published On 2024-12-31 17:05 GMT   |   Update On 2024-12-31 17:05 GMT
  • பிரதமர் மோடி அங்குள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
  • விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிவந்த பிரதமர் மோடி கடல் அழகை ரசித்தார்.

இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதற்கிடையே, தேர்தல் முடிவுற்ற நிலையில் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 2 நாட்கள் தியானத்தில் ஈடுபட்டார்.

இதற்காக, கடந்த மே மாதம் 30ம் தேதி கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி அங்குள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பிறகு, படகில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றார்.

பின்னர், மண்டபத்தின் ஒரு பகுதியில் உள்ள பகவதி அம்மனின் பாதம் பதித்த மண்டபத்துக்கு சென்று தரிசனம் செய்த பிரதமர் மோடி விவேகானந்தரின் முழு உருவ சிலைக்கு மலர் தூவி வணங்கி மரியாதை செய்தார். ராமகிருஷ்ணா பரமஹம்சர், அன்னை சாரதா தேவி ஆகியோரின் படங்களையும் வணங்கினார்.

இதைதொடர்ந்து, பிரதமர் மோடி தியான மண்டபத்துக்கு சென்று தனது தியானத்தை தொடங்கி இரவு வரை ஈடுபட்டனார். பிறகு, அன்று இரவு தனக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த தனது தனி அறையில் ஓய்வு எடுத்தார்.

பிறகு மே 31ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் எழுந்த பிரதமர் மோடி குளித்து முடித்துவிட்டு காவி உடைகளை உடுத்தினார். தனது 3 விரல்களால் விபூதியை தொட்டு நெற்றியில் பெரிய பட்டையை போட்டுக் கொண்டு அதன் நடுவில் குங்குமத்தையும் வைத்துக் கொண்டார்.

பின்னர் காலை 5 மணி அளவில் தனது அறையை விட்டு வெளியே வந்த அவர் காவி சட்டை, வேட்டி, காவி துண்டு, கையில்

கையில் ருத்ராட்ச மாலை ஒன்றையும் வைத்திருந்த அவர் அதனை விரல்களால் உருட்டிக் கொண்டே விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி வந்தார்.

மண்டபத்தின் கிழக்கு பகுதிக்கு சென்று காலை 5.55 மணி அளவில் சூரிய நமஸ்காரம் செய்து வழிபாடு நடத்தினார். அப்போது தனது 2 கைகளையும் மேலே தூக்கி சூரிய பகவானை மனமுருக வணங்கி வழிபட்டார்.

பின்னர் சிறிய சொம்பை எடுத்து அதில் இருந்த தீர்த்தத்தை கடலில் ஊற்றினார். இது கங்கை நதியில் இருந்து எடுத்து வந்த புனித தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது.

சுமார் 10 நிமிடங்கள் வரையில் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிவந்த பிரதமர் மோடி கடல் அழகையும் ரசித்து பார்த்தார்.

பின்னர் விவேகானந்தரின் முழு உருவ சிலையுடன் கூடிய மண்டபத்துக்கு சென்ற மோடி சிலை எதிரே சம்மணமிட்டு தரையில் அமர்ந்து தியானம் செய்தார்.

விவேகானந்தரின் சிலையை பார்த்து முதலில் வணங்கிய அவர் பின்னர் கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். அப்போதும் ருத்ராட்ச மாலையை விரல்களால் வருடியபடியே மந்திரங்களையும் அவர் சொன்னார்.

இதன்பிறகு தியான மண்டபத்துக்கு சென்ற பிரதமர் மோடி அங்கேயும் துறவி கோலத்தில் அமர்ந்து நீண்ட நேரம் தியானம் செய்தார்.

அப்போது தியான மண்டபத்தில் மனதுக்கு இதமான... மனதை சாந்தப்படுத்தும் ஓம்-பிரணவ மந்திரம் ஒலித்துக்கொண்டே இருந்தது. 

இந்திய அளவில் சக்தி வாய்ந்த தலைவராகவும், சர்வதேச அளவில் மதிப்புமிக்கவராகவும் திகழ்ந்து வரும் பிரதமர் மோடி இங்கு தியானம் செய்ததால் விவேகானந்தர் நினைவு மண்டபம் சர்வதேச அளவிலான கவனத்தை பெற்றது.

Tags:    

Similar News