Recap 2024

2024 ரீவைண்ட்.. நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கு

Published On 2024-12-31 14:41 GMT   |   Update On 2024-12-31 14:41 GMT
  • கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
  • மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்ததால் 29 நோயாளிகள் உயிரிழந்தனர்.

மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்ற குற்றவாளியிடம் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்த சமயத்தில் பெண் மருத்துவருக்கு விரைந்து நீதி கிடைக்கவும் மருத்துவர்களின் பணிச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும் நாடு முழுவதும் மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

மருத்துவர்கள் தங்களின் போராட்டங்களை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.

ஜூனியர் மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் 29 நோயாளிகள் உயிரிழந்ததாக மேற்கு வங்க அரசு தெரிவித்தது.

இதனையடுத்து உயிரிழந்த 29 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.

உச்சநீதிமன்ற தலையீட்டை அடுத்து மற்ற பகுதிகளில் போராட்டங்கள் படிப்படியாகக் குறைந்தாலும், கொல்கத்தாவில் தீவிரமாக மருத்துவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இதனிடையே ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் இருந்து சுமார் 50 மூத்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் பணிகளிலிருந்து ராஜினாமா செய்தனர்.

இதனை தொடர்ந்து கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் இருந்து கிட்டத்தட்ட 60 மருத்துவர்கள் ராஜினாமா செய்தனர். கூண்டோடு நடந்த இந்த ராஜினாமாக்களால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணி தடைப்படும் அபாயம் ஏற்பட்டது.

இந்த சூழலில் மருத்துவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே, ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ. அதிகாரிகளுக்குக் கொல்கத்தா ஐகோர்ட் அறிவுறுத்தியது.

அதன்படி விசாரணையைத் தொடங்கிய சி.பி.ஐ. அதிகாரிகள், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ், தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை கைது செய்தனர்.

இதனையடுத்து சந்தீப் கோஷ் மற்றும் அபிஜித் மொண்டல் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி மேற்கு வங்காள சீல்டா கோர்ட் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

சட்டப்படி 90 நாட்களுக்குள் சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாததால் இருவருக்கும் ஜாமின் வழங்கப்படுவதாக கோர்ட் தெரிவித்துள்ளது.

பெண் டாக்டர் வழக்கில் தொடர்புடைய இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளதால் கொல்கத்தாவில் இந்த மாதம் மீண்டும் போராட்டங்கள் வெடித்தது.

பல மாதங்கள் மருத்துவர்கள் போராட்டம் நடத்தியும் இந்த பாலியல் வழக்கில் தீர்வு காணப்படவில்லை. நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது. வரும் 2025 ஆம் ஆண்டிலாவது இந்த வழக்கில் முடிவு எட்டப்படும் என்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

Tags:    

Similar News