2024 ரீவைண்ட்: ஆளுநர் பதவியை உதறிய தமிழிசை- மக்களவை தேர்தலிலும் தோல்வி
- மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
- தமிழிசை சவுந்தரராஜன் தென் சென்னை தொகுதியில் களமிறங்கினார்.
18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் ஜூன் மாதம் வரையில் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில், முதற்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாட்டிற்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தலில் போட்டியிட்டு மக்களவை தொகுதிகளை கைப்பற்ற திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிரமாக களமிறங்கின. மேலும், கூட்டணி பேச்சுவார்த்தைகளில் பல்வேறு திருப்பங்களும் நடைபெற்றது.
அந்த சமயம் யாரும் எதிர்பாராத நிலையில், தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவிகளை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்தார். மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் அறிவித்தார்.
இதுகுறித்து கூறிய தமிழிசை, "தீவிரமான மக்கள் பணியை நேரடியாக செய்யவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன். ஆளுநராக இருந்தபோது மக்களுக்கான ஆளுநராகவே இருந்திருக்கிறேன். ஆளுநர் பதவி காலத்தில் அரசியல் அனுவபம் அதிகரித்திருக்கிறது. இந்த பதவி என்னுடைய அரசியல் பணியை தடுக்கவில்லை" என்று கூறினார்.
தொடர்ந்து, மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலில் தமிழிசை போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழிசை சவுந்தரராஜன் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கினார்.
திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் ஆகியோரை எதிர்த்து பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டார்.
ஆனால், தமிழிசை சவுந்தரராஜன் தோல்வியடைந்து 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.