திருமண நாளில் பெற்றோரை கொலை செய்து போலீசிடம் நாடகமாடிய மகன்.. வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்
- போலீசார் அப்பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
- வீட்டிற்குள் யாரும் அத்துமீறி நுழைந்ததற்கான எந்த தடயமும் போலீசுக்கு கிடைக்கவில்லை.
டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, மகள் என 3 பேரும் வீட்டின் படுக்கையறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த தம்பதியின் மகன் அர்ஜுன் டெல்லி போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து ராஜேஷ்குமார் (51), இவரது மனைவி கோமல் (46), மற்றும் அவர்களது மகள் கவிதா (23) ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றினர்.
அர்ஜுன் காலையில் நடைப்பயிற்சி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து போது தனது தாய், தந்தை, தங்கை ஆகியோர் கொலை செய்யப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் இன்று தான் தனது அம்மா அப்பாவின் திருமண நாள் என்றும் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். வீட்டிற்குள் யாரும் அத்துமீறி நுழைந்ததற்கான எந்த தடயமும் போலீசுக்கு கிடைக்கவில்லை.
இதனையடுத்து அர்ஜுனிடம் போலீசார் விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியுள்ளார். இதனையடுத்து அவரிடம் நீண்ட நேரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது குடும்பத்தை நான் தான் கொலை செய்தேன் என்பதை அர்ஜுன் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.
அர்ஜுனுக்கு, அவருடைய தந்தைக்குமான உறவு சுமூகமான முறையில் இல்லை. அர்ஜுனின் தந்தை முன்னாள் ராணுவ அதிகாரியாவார். இதனால் அர்ஜுனிடம் அவர் சிறுவயதில் இருந்தே கண்டிப்புடன் நடந்துள்ளார்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் முன்னாடி கூட அர்ஜுனை அவர் கடுமையாக திட்டியுள்ளார். அப்பா தொடர்ந்து தன்னை திட்டுவதை அம்மாவும் தங்கையும் வேடிக்கை பார்த்ததை கண்டு அர்ஜுனுக்கு மொத்த குடும்பத்தின் மீதும் கோவம் வந்துள்ளது.
அதனால் தான் தாய் தந்தையின் 27 ஆவது திருமண நாள் அன்று அவர்களை கொலை செய்ய அர்ஜுன் திட்டமிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அதிகாலையில் 3 பேரையும் வீட்டில் வைத்தே ஆத்திரம் தீர படுகொலை செய்திருக்கிறார்.
இந்த சம்பவம் நடந்தபோது, நடைபயிற்சிக்காக வெளியே சென்றிருந்தேன் என்று பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் போலீசாரிடமும் அர்ஜுன் தெரிவித்துள்ளார். ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் இந்த திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.