மேற்கு வங்காளத்தில் நாங்கள் தனித்து போட்டி: மம்தா பானர்ஜி அதிரடி
- காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் மட்டும் ஒதுக்க மம்தா பானர்ஜி முடிவு செய்திருந்தார்.
- காங்கிரஸ் கட்சி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தனியாக போட்டியிட தயார் என அறிவித்திருந்தது.
மக்களவை தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும் மாநில கட்சிகளுக்கும் இடையில் தொகுதி பங்கீட்டில் பிரச்சனை உருவாகியுள்ளது.
முக்கியமாக மேற்கு வங்காளத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் தொடக்கத்தில் இருந்தே மோதல் இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீடு கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம். மேற்கு வங்காளத்தில் அந்த கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்படும் என மம்தா பானர்ஜி ஏற்கனவே அதிரடியாக அறிவித்திருந்தார்.
2 இடங்களை ஏற்க காங்கிரஸ் மறுத்து வந்தது. தனியாக போட்டியிட தயார் என காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் நாங்கள் பா.ஜனதாவை தனித்து நின்று எதிர்கொள்வோம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:-
நான் காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசனை நடத்தவில்லை. மேற்கு வங்காளத்தில் நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம் என ஏற்கனவே நான் தெரிவித்துள்ளேன். நாட்டில் என்ன நடக்கும் என்பது குறித்து நான் கவலைப்படவில்லை.
ஆனால், நாங்கள் மதசார்பற்ற கட்சி. மேற்கு வங்காளத்தில் தனித்து நின்று பா.ஜனதாவை தோற்கடிப்போம். நான் இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ளேன். மேற்கு வங்காளத்தில் ராகுல் காந்தி நடைபயணம் செல்ல இருக்கிறார். ஆனால், எங்களுக்கு அதுபற்றி தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் 42 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் மம்தா பானர்ஜி கட்சி 22 இடங்களிலும், பா.ஜனதா 18 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.