8 பேரை பலி கொண்ட விபத்து.. மீட்பு பணிகளை தொடர்ந்து மீண்டும் ரெயில் சேவை துவக்கம்
- எக்ஸ்பிரஸ் ரெயிலின் பின்பகுதியில் இருந்த 3 பெட்டிகள் தடம் புரண்டு, தூக்கி வீசப்பட்டன.
- சரக்கு ரெயிலின் என்ஜின் பகுதி, பயணிகள் ரெயிலின் மற்றொரு பெட்டியின் அடிப்பகுதியில் புகுந்து நின்றது.
மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து அசாம் வழியாக திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவுக்கு கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் டார்ஜிலிங் செல்லும் சுற்றுலா பயணிகள் அதிகம்பேர் பயணிப்பார்கள்.
நேற்று முன்தினம் இரவு இந்த ரெயில் அகர்தலாவில் இருந்து, கொல்கத்தா அருகே உள்ள சீல்டாவுக்கு புறப்பட்டது. ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.
நியூ ஜல்பைகுரி ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரங்கபாணி ரெயில் நிலையம் அருகே நேற்று காலை வந்தபோது, சிக்னலுக்காக கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டு இருந்தது.
அப்போது அதே தடத்தில் வந்த சரக்கு ரெயில் ஒன்று, நின்று கொண்டு இருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயிலின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.
இதனால் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பின்பகுதியில் இருந்த 3 பெட்டிகள் தடம் புரண்டு, தூக்கி வீசப்பட்டன. இதில் அந்த 3 பெட்டிகளும் பலத்த சேதம் அடைந்தன.
அதே நேரம் சரக்கு ரெயிலின் என்ஜின் பகுதி, பயணிகள் ரெயிலின் மற்றொரு பெட்டியின் அடிப்பகுதியில் புகுந்து நின்றது. இதனால் எக்ஸ்பிரஸ் ரெயிலின் அந்த பெட்டி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது.
இந்த கோரவிபத்தில், சரக்கு ரெயிலை ஓட்டிவந்த டிரைவர் (லோகோ பைலட்), உதவி டிரைவர் மற்றும் ரெயில்களில் பயணித்தவர்கள் என 9 பேர் பலியானார்கள். 41 பேர் படுகாயம் அடைந்தனர். அதே நேரம் உள்ளூர் போலீசார் கூறுகையில், 'விபத்தில் 15 பேர் உயிரிழந்து இருக்கலாம் என்றும், 60 பேர் படுகாயம் அடைந்து இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும், ரெயில்வே உயர் அதிகாரிகள், மீட்பு படையினர், போலீசார் அங்கு சென்று உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
சேதமடைந்த ரெயில் பெட்டிகளில் இருந்த உடல்களை மீட்கும் பணியில் போலீசாருடன், உள்ளூர் மக்களும் ஈடுபட்டனர்.
இதனிடையே, ரெயில் விபத்து நடந்த பகுதியில் நடைபெற்ற மீட்பு பணிகள் காரணமாக இன்று காலை முதல் அப்பகுதியில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதை அடுத்து ரெயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. விபத்து நடந்த பகுதியை ரெயில் கடக்கும்போது மெதுவாக செல்கிறது.