இந்தியா

மும்பையை பாதுகாப்பற்ற நகரம் என முத்திரை குத்துவதா?: பட்னாவிஸ் ஆவேசம்

Published On 2025-01-17 03:34 IST   |   Update On 2025-01-17 03:34:00 IST
  • பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
  • கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பட்னாவிஸ் தெரிவித்தார்.

மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தின் பாந்த்ராவில் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை இவரது வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர், அங்கிருந்த பணிப்பெண்ணுடன் வாக்குவாதம் செய்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த சைஃப் அலிகானை அந்த நபர் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடினார்.

படுகாயம் அடைந்த சைஃப் அலிகான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். இதற்கிடையே, குற்றவாளியின் சிசிடிவி புகைப்படத்தை போலீசார் வெளியிட்டனர்.

சைஃப் அலிகான் மீதான கத்திக்குத்து தாக்குதலுக்கு பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவது பற்றி மாநில அரசை கடுமையாக சாடினர்.

இந்நிலையில், கத்திக்குத்து சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். மும்பையை பாதுகாப்பற்றது என முத்திரை குத்துவது சரியல்ல என தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

மும்பை நாட்டின் மிகவும் பாதுகாப்பான மெகா நகரம். இந்த சம்பவம் தீவிரமானது மற்றும் துரதிர்ஷ்டவசமானது.

ஆனால் நகரத்தை பாதுகாப்பற்றது என முத்திரை குத்துவது தவறு. இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் போலீசார் வழங்கி உள்ளனர்.

இது என்ன வகையான தாக்குதல், உண்மையில் இதற்குப் பின்னால் என்ன இருக்கிறது, தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் என்ன என்பது விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News