தடகள வீராங்கனை 62 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்: 56 பேர் கைது
- பாதிக்கப்பட்ட வீராங்கனை, தான் கூறிய புகார்களின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்குகளில் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகிறார்.
- மற்ற வழக்குகளிலும் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வீராங்கனையிடம் ரகசிய வாக்குமூலம் பதியப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனையான 18 வயது பள்ளி மாணவி ஒருவர், 62 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது.
அவர் 13 வயதில் இருந்து பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மட்டுமின்றி தனது காதலன் மற்றும் காதலனின் நண்பர்களால் பலமுறை கூட்டு வன்கொடுமையும் செய்யப்பட்டிருக்கிறார். பள்ளி படிக்கும் விளையாட்டு வீராங்கனைக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், மாணவி குற்றம் சுமத்திய 62 பேர் மீதும் போக்சோ வழக்கு பதிந்தனர். வீராங்கனை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக பத்தினம்திட்டா டவுன், கொன்னி, ரன்னி, மலையாளப்புழா, பந்தளம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 30 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் வீராங்கனையை சீரழித்தவர்கள் அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். நேற்று வரை வீராங்கனையின் காதலன், அவரது நண்பர்கள், ஆட்டோ டிரைவர்கள், மீன் வியாபாரிகள், 18 வயதுக்கும் உட்பட்ட சிறார்கள் உள்ளிட்ட 52 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தநிலையில் இந்த சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்திருக்கிறது.
அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட வீராங்கனை, தான் கூறிய புகார்களின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்குகளில் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகிறார். பாலியல் வன்கொடுமை தொடர்பாக மொத்தம் 30 வழக்குகள் பதியப்பட்டிருக்கும் நிலையில், அவற்றில் 6 வழக்குகளில் வீராங்கனை ரகசிய வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
மற்ற வழக்குகளிலும் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வீராங்கனையிடம் ரகசிய வாக்குமூலம் பதியப்படுகிறது. இந்த வழக்குகளில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்ட பிறகு அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள்.