திருப்பதியில் இருந்து வந்த மதுரை ஆம்னி பஸ் கவிழ்ந்து 4 பேர் பலி
- விபத்து காரணமாக திருப்பதி-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பலியானவர்கள் குறித்து விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
திருப்பதி:
திருப்பதியில் இருந்து நேற்று இரவு மதுரைக்கு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த ஆனந்த் என்பவர் பஸ்சை ஓட்டி சென்றார். மாற்று டிரைவராக சாகுல் ஹமீது இருந்தார். பஸ்சில் 29 பயணிகள் இருந்தனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், சீலப்பள்ளி அடுத்த காஜுல பள்ளி என்ற இடத்தில் நள்ளிரவு 1 மணி அளவில் பஸ் வந்து கொண்டு இருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரியின் மீது பஸ் திடீரென பயங்கர வேகத்தில் மோதியது. இதில் பஸ் சாலையில் கவிழ்ந்தது. தூக்க கலக்கத்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.
இந்த விபத்தில் தாய் மகள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்தவர்களை மீட்டனர். 13 பேரை ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் சி.எம்.சி மற்றும் ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். மற்றவர்களுக்கு சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர்.
அப்பகுதி முழுவதும் இருட்டாக இருந்ததால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.
பின்னர் ராட்சத கிரேன் கொண்டுவரப்பட்டு சாலையில் கவிழ்ந்த பஸ்சை மீட்டு அப்புறப்படுத்தினர். விபத்து காரணமாக திருப்பதி-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்த சித்தூர் கலெக்டர் சுமித் குமார் சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார். சிறப்பான சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.
பலியானவர்கள் குறித்து விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
படுகாயம் அடைந்தவர்கள் மதுரையை சேர்ந்த விவேக்குமார் (வயது34), சரவணன் (55), ஹரிதா (19) என தெரியவந்தது. படுகாயம் அடைந்தவர்களில் 6 பேரில் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.