உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் குமாரசாமி சந்திப்பு
- மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட குமாரசாமி வெற்றி பெற்றார்.
- புதிதாக பதவியேற்ற அமைச்சரவையில் குமாரசாமி மத்திய மந்திரியாக பொறுப்பேற்றார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான குமாரசாமி வெற்றி பெற்றார். பிரதமர் மோடி தலைமையில் பதவியேற்ற அமைச்சரவையில் குமாரசாமி மத்திய மந்திரியாக பொறுப்பேற்றார்.
கனரக தொழில்துறை மற்றும் எஃகு துறை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய மந்திரியாக குமாரசாமி பதவியேற்று இருப்பது இதுவே முதல் முறை.
இதற்கிடையே, மத்திய மந்திரியாக பொறுப்பேற்ற குமாரசாமி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, பிரதமர் மோடி எனக்கு பெரிய பொறுப்பை அளித்துள்ளார் என தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய மந்திரி குமாரசாமி இன்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது, கர்நாடக அரசியல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்தனர் என குமாரசாமியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.