VIDEO: அடர் பனிமூட்டத்தில் கண்மண் தெரியாமல் இடித்துக்கொண்ட வாகனங்கள் - நெடுஞ்சாலையில் நடந்த விபத்து
- டெல்லி -லக்னோ நெடுஞ்சாலையில் பஹதுர்கர் ஸ்டேஷன் பகுதிக்கு அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
- இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின
குளிர்காலத்தில் வடஇந்தியாவில் நிலவும் அடர் பனிமூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விமானம் முதல் சாலை போக்குவரத்து வரை தடை படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் இன்று அதிகாலை நிலவிய அடர் பனிமூட்டத்தில் சாலையில் பல்வேறு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டெல்லி -லக்னோ நெடுஞ்சாலையில் பஹதுர்கர் ஸ்டேஷன் பகுதிக்கு அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அடர்ந்த மூடுபனி காரணமாக வாகனம் ஓட்டுவதற்கு அபாயகரமான சூழ்நிலையை உருவாகி உள்ளதாகவும் இதனால் அங்கு பல விபத்துகள் ஏற்படுவதாகவும் ஹாபூர் போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில் டெல்லியில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 6 முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதன்படி இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 9.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது.
அடர்ந்த மூடுபனி சூழ்ந்ததால், பார்வைத் தன்மை பூஜ்ஜியமாக குறைந்துள்ளது. இது விமானம் மற்றும் ரெயில் போக்குவரத்துகளை பாதித்துள்ளது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. 26 ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.