மத்திய அமைச்சராக இருந்தபோது கூட்டுறவுத்துறைக்கு செய்தது என்ன?- சரத் பவாருக்கு அமித் ஷா கேள்வி
- சர்க்கரை ஆலைகளுக்கு 46 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.
- கூட்டறவுத் துறை, விவசாயிகள், சர்க்கரை ஆலைகள், மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வளர்ச்சிக்காக நீங்கள் செய்தது என்ன?
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சரான அமித் ஷா மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்றிருந்தார். இவர் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது சரத் பவார் மத்திய அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக இருந்தபோது, கூட்டுறவுத்துறைக்கு செய்தது என்ன? என கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக அமித் ஷா கூறுகையில் "இந்தியாவின் ஆன்மீக வரலாற்றில் மிகவும் தொன்மையான காசி (வாரணாசி) அனுபவித்த முக்கியத்துவம் போன்று பாஜக தலைமையிலான மத்திய அரசு மற்றும் மேற்கு மகாராஷ்டிரா மாநில அரசு கூட்டறவுத்துறையை தனித்துவமாகவும், பிரகாசமாகவும் மாற்றும்.
நீங்கள் 10 ஆண்டுகள் விவசாய அமைச்சராக இருந்தீர்கள், கூட்டுறவுத்துறை உங்கள் அதிகார வரம்பிற்குள் இருந்தது. கூட்டறவுத்துறை, விவசாயிகள், சர்க்கரை ஆலைகள், மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வளர்ச்சிக்காக நீங்கள் செய்தது என்ன என்பது மகாராஷ்டிரா மக்களிடம் சொல்ல வேண்டும் என நான் பவார் சாகேப் (சரத் பவார்) இடம் கேட்க விரும்புகிறேன். வரிச் சிக்கல்களைத் தீர்த்தீர்களா அல்லது மாதிரி துணைச் சட்டங்களை உருவாக்கினீர்களா?.
விளம்பரம் மூலம் ஒரு தலைவராக மாறுவது மட்டும் போதாது... நீங்கள் களத்தில் வேலை செய்ய வேண்டும்.
மோடி கூட்டுறவு அமைச்சகத்தை அமைத்தார். சர்க்கரை ஆலைகளுக்கான எத்தனால் கொள்கையை வகுத்தார். சர்க்கரை உற்பத்தியாளர்களின் வருமான வரி பிரச்சனைகளைத் தீர்த்தார் மற்றும் வரிவிதிப்புக்கான மாதிரி துணைச் சட்டங்களைக் கொண்டு வந்தார்.
சர்க்கரை ஆலைகளுக்கு 46 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. பதிய குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.