பட்ஜெட் தயாரிப்பு பணிகள்: அல்வா கிண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றார் நிதி மந்திரி
- மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
- அல்வா கிண்டும் நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி பங்கேற்றார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது. அன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்துகிறார்.
இதைத் தொடர்ந்து 2025-26 ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் இறுதியானதும் அல்வா கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் அதிகாரிகளும் ஊழியா்களும் அறைக்குள் பூட்டப்படும் 'லாக்-இன்' நடைமுறை தொடங்குவதற்கு முன் அல்வா நிகழ்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில், அல்வா கிண்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்று, பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் அனைவருக்கும் அல்வா விநியோகம் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் பட்ஜெட் தயாரித்தல் மற்றும் தொகுத்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அலுவலர்களும் பங்கேற்றனர்.