நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை- சஞ்சய் ராயின் சகோதரி
- சியால்டா நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டது.
- விசாரணை அனைத்தும் கடந்த 9-ந்தேதி நிறைவடைந்தது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராயை போலீசார் கைது செய்தனர்.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. கொல்கத்தாவில் உள்ள சியால்டா நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணை அனைத்தும் கடந்த 9-ந்தேதி நிறைவடைந்தது.
இதையடுத்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு கூறப்பட்டது. தண்டனை விவரம் வரும் 20-ந்தேதி (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சஞ்சாய் ராய்க்கு நாளை நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று சஞ்சய் ராயின் சகோதரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். சட்டம் என் சகோதரனை குற்றவாளி என கண்டறிந்துள்ளது. அதன்படி அவர் தண்டிக்கப்படுவார். நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை. எனக்கு வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை என்று கூறினார்.
சஞ்சய் ராய்க்கு நாளை நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும் தண்டனை, அதிகபட்சமாக மரண தண்டனையாகவோ அல்லது ஆயுள் தண்டனையாகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது.